பெரும் தலையை கை காட்டி நாட்டை அதிரவைத்த ரிப்போர்ட்- புது புயல்.. கொதிக்கும் இந்தியா கூட்டணி

Update: 2024-08-12 07:14 GMT

பெரும் தலையை கை காட்டி நாட்டை அதிரவைத்த ரிப்போர்ட்- புது புயல்.. கொதிக்கும் இந்தியா கூட்டணி

அதானி குழுமத்திற்கு எதிராக அறிக்கை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்திய ஹிண்டன்பர்க், தற்போது செபி தலைவருக்கு எதிராக அறிக்கை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதன் பின்னணியை அலசுகிறது இந்த செய்தி தொகுப்பு...

கடந்த ஆண்டு அதானி குழுமம் மீது ஹிண்டன்பர்க் ஆய்வு நிறுவனம் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன் வைத்து பரபரப்பு கிளப்பியிருந்தது..

வெளிநாடுகளில் போலி கணக்குகள் தொடங்கி அதன் மூலம் பல கோடிக்கணக்கில் ரகசிய பரிவர்த்தனையில் ஈடுபட்டதாக ஆதாரங்களை வெளியிட்டிருந்தது ஹிண்டன்பர்க்..

இவ்விவகாரம், உச்ச நீதிமன்றம் வரை சென்று செபி உரிய விசாரணை நடத்த வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது..

இந்நிலையில் மற்றொரு ஆய்வு மூலம் பகிர் கிளப்பியுள்ளது ஹிண்டன்பர்க் நிறுவனம்.. அதுவும் பங்குச்சந்தை ஒழுங்காற்று வாரியமான செபி மீது குற்றஞ்சாட்டியுள்ளது.

அதானி குழுமத்தின் நிதி முறைகேடுகளுடன் தொடர்புடைய வெளிநாட்டு நிறுவனங்களில் செபி தலைவர் மாதபி பூரி புச் மற்றும் அவரது கணவர் தவல் புச் ஆகியோர் பங்குகளை வைத்திருந்ததாக தனிநபர் ஆவணங்களை மேற்கோள்காட்டி அம்பலப்படுத்தியுள்ளது.

இதனால், அதானி குழுமத்திற்கு சரிவு ஏற்பட்டால், அது தனிப்பட்ட முறையில் தங்களையும் பாதிக்கும் என்பதால் அதானி குழுமத்திற்கும் செபிக்கும் சுமூகமான உறவு இருந்ததாக கூறுகிறது ஹிண்டன்பர்க்.

இதன் காரணமாகவே, அதானி குழுமத்தின் நிதி முறைகேடு விவகாரத்தில் செபி தரப்பில் முறையான நடவடிக்கைகள் எடுக்கவில்லை என குற்றஞ்சாட்டியுள்ளது.

மேலும், அதானி குழுமத்தின் நிதி முறைகேடுகளுடன் தொடர்புடைய வெளிநாட்டு நிறுவனங்களின் நிதி தொடர்பான தகவல்கள் தெளிவற்ற முறையில் இருப்பதாகவும் கூறியுள்ளது.

அத்துடன் அதானி குழும விவகாரத்தில், சந்தேகத்திற்குரிய மற்ற பங்குதாரர் நிறுவனங்கள் எதிராக செபி இதுவரை எந்த வித நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனால், அதானி குழுமம் மீதான செபியின் விசாரணை குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என ஹிண்டன்பர்க் அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இவ்விவகாரம் பரபரப்பை கிளப்பியுள்ள சூழலில், செபி தலைவர் மற்றும் அவருடைய கணவர் தவல் புச்

ஆகியோர் இந்த குற்றச்சாட்டுகளை திட்டவட்டமாக மறுத்து அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

ஹிண்டன்பர்க்கின் குற்றச்சாட்டுகளில் எந்தவித உண்மையும் இல்லை என்றும், தங்களுடைய வாழ்க்கையும், நிதி பரிமாற்றங்களும் திறந்த புத்தகம் போல வெளிப்படையானவை என தெரிவித்துள்ளனர்.

அதே போல், அதானி குழுமம், ஹிண்டன்பர்க்கின் குற்றச்சாட்டை மறுத்துள்ளது. ஹிண்டன்பர்க் பொதுவெளியில் கிடைக்கும் தகவல்களை தீங்கிழைக்கும் வகையில் தவறாக தேர்ந்தெடுத்து பயன்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளது.

இது உண்மைக்கும், சட்டத்திற்கும் புறம்பானது எனவும் கூறியுள்ள நிலையில், எதிர்க்கட்சி தரப்பில் இருந்து எதிர்ப்புகள் கிளம்பிய வண்ணம் உள்ளன. ஹிண்டன் பர்க் ஆய்வறிக்கையை சுட்டிக்காட்டி இது தொடர்பாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என காங்கிரஸ் சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

செபி தலைவர் மற்றும் அவரது கணவரின் பாஸ்போர்ட்டுகளை முடக்கி உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என திரிணாமுல் காங்கிரஸ் கூறியுள்ளதால், தேசிய அளவில் இவ்விவகாரம் பேசு பொருளாகியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்