"அக்கவுண்ட்ல பேரே இல்ல".. ஊரையே ஏமாற்றிய போஸ்ட் மாஸ்டர்.. ஒன்று கூடிய மக்கள்
திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகே, சேமிப்பு கணக்கு மூலம் தபால் நிலையத்தில் செலுத்தப்பட்ட பணம் முறைகேடு செய்யப்பட்டதாக கூறி, அலுவலகத்தை மக்கள் முற்றுகையிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
வத்தலகுண்டு அடுத்த ஜி.தும்மலபட்டி கிராமத்தில் தபால் நிலையம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு, சுமார் 25 ஆண்டுகளுக்கும் மேலாக முனியாண்டி என்பவர் போஸ்ட் மாஸ்டராக பணியாற்றி வந்திருக்கிறார். முனியாண்டியிடம் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த கிராம மக்கள், சேமிப்பு தொகை மற்றும் வைப்புத் தொகை மூலம் பணம் செலுத்தி வந்திருக்கின்றனர். கடந்த 5 நாட்களுக்கு முன்பு வைப்புத் தொகையை திரும்ப பெற சென்ற சிலர், தாங்கள் செலுத்திய பணத்திற்கும் தங்களின் தபால் நிலைய கணக்கில் இருந்த பணத்திற்கும் வித்தியாசம் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்திருக்கின்றனர். உடனே, இது குறித்து தபால் நிலைய தனிக்கை அதிகாரிகள் சோதனை செய்த போது, பலரது கணக்குகளில் பணம் முறைகேடு நடந்திருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. போலி பாஸ்புக் மற்றும் ரசிது வழங்கி பணம் வசூல் செய்யப்பட்டதாகவும், போஸ்ட் மாஸ்ட்ர் முனியாண்டி தலைமறைவானதாகவும் வெளியான தகவல்கள் மக்களை அதிர்ச்சியடைய செய்திருக்கிறது. பிரதமரின் தங்க மகள் திட்டத்தில் சேமிப்பு கணக்கு செய்த 200-க்கும் மேற்பட்ட முதற்கொண்டு, 500க்கும் மேற்பட்டோரிடம் கோடிக்கணக்கில் பண மோசடி செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த மக்கள், தபால் நிலையத்தில் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியது.