அரசு சார்பில் கட்டப்படும் குடியிருப்புகளில் வீடு வாங்கி வருவதாக கூறி 10 கோடி ரூபாய் மோசடி புகாரில் சிக்கிய நபர் போலீஸில் சரணடைந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏழை மக்களை குறித்து அரங்கேறிய மோசடி குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு...
எப்படியாவது சொந்த வீடு வாங்க மாட்டோமா என்ற கனவுடன் கோடிக்கணக்கானோர் இங்கு நாட்களை நகர்த்தி வருகின்றனர்.
இப்படிப்பட்ட கனவோடு சென்னை மயிலாப்பூரில் வசித்து வந்தவர்களை குறிவைத்து ஒரு மிகப்பெரிய மோசடியை அரங்கேற்றியிருக்கிறார் மயிலாப்பூரை சேர்ந்த அப்துல்லா...
தமிழக அரசு நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் சாந்தோம் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டப்பட்டு வரும் நிலையில், இதனை தனது ஆயுதமாக்கி அப்துல்லா பல கோடி ரூபாய் மோசடி செய்ததாக அதிர்ச்சிகர புகார் எழுந்துள்ளது.
சொந்தமாக வீடு இல்லாத மக்களை தேர்வு செய்து, அவர்களிடம் தான் ஒரு அரசு அதிகாரி என அறிமுகமாகியுள்ளார். அவர்களிடம் சாந்தோமில் கட்டப்படும் அரசு குடியிருப்பில் வீடு வாங்கி தருவதாக கூறியுள்ளார். இதனை நம்பி ஏழை மக்கள் தவணை முறையில் லட்சக்கணக்கில் பணத்தை கொடுக்க, போலி அரசு ஆவணங்களை கொடுத்து அவர்களை மேலும் நம்பவைத்து அப்துல்லா எமாற்றியுள்ளதாக புகார் எழுந்துள்ளது.
சுமார் 100க்கும் மேற்பட்டோரிடம் 10 கோடி ரூபாய் வரை அப்துல்லா மோசடி செய்திருக்கலாம் என பாதிக்கப்பட்ட மக்கள் ஆதங்கப்பட்டுள்ளனர்.
பணத்தை இழந்த பொதுமக்கள் அப்துல்லாவை தீவிரமாக தேடி வந்த நிலையில், மோசடியில் ஈடுபட்ட அப்துல்லா தன் உயிருக்கு ஆபத்திருப்பதாக கூறி மயிலாப்பூர் காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.
அப்துல்லாவிடம் மேற்கொள்ளப்பட்ட முதற்கட்ட விசாரணையில், தனது கூட்டாளியான ஹரி என்பவரிடம் பணத்தை கொடுத்ததாகவும், ஆனால் அவர் அந்த பணத்தை எடுத்துக்கொண்டு தப்பிச்சென்று தலைமறைவாகி விட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து அப்துல்லாவின் செல்போன் எண் மற்றும் வங்கி பண பரிவர்த்தனைகளை அடிப்படையாகக் கொண்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.