"5 வருடமாக எந்த வசதியும் இல்லை.. இருக்கும் வீடு நமக்குதான் சொந்தமா?" குமுறும் 23,000 குடும்பம்
பெரும்பாக்கம் வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பில் நிரந்தர வீடு ஒதுக்கப்படாத மக்களின் வேதனையை பகிர்கிறது இந்த தொகுப்பு...
23 ஆயிரம் குடியிருப்புகளோடு காட்சியளிக்கும் பெரும்பாக்கம் வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பில்... போதிய வசதியில்லை... இப்போது இருக்கும் வீடு கூட நிரந்தரமானது இல்லை என கவலை தெரிவிக்கிறார்கள் பலர்...
சென்னையில் ஆற்றின் கரையோரம் வசித்த மக்களுக்காக அவர்கள் வாழ்விட மேம்பாட்டுக்காக அமைக்கப்பட்டதுதான் இந்த குடியிருப்பு..
குடியிருப்புக்கு 2019 ஆம் ஆண்டு சிந்தாரிப்பேட்டை பகுதியிலிருந்து அழைத்துவரப்பட்ட மக்கள்.. தங்களுக்கு நிரந்தர குடியிருப்பு வழங்கவில்லை... அரசு அறிவித்த எந்த உதவித்தொகையும் கிடைக்கவில்லை... ரசீதை கொடுத்து வீட்டை கொடுத்திருக்கிறார்கள் என்கிறார்கள்.
ரசீதை மட்டும் வைத்திருக்கும் அவர்கள்... இருக்கும் வீடு நமக்குதான் சொந்தமா என தெரிவில்லை என்றும் எந்த அடிப்படை வசதியும் கிடைப்பது இல்லை என்றும் தெரிவிக்கிறார்கள்.
நகரில் இருக்கும் போது அன்றாட வேலைக்காவது செல்ல முடிந்தது என சொல்லும் அவர்கள் இப்போது வேலையும் இல்லை... வருமானமும் இல்லை என கலங்குகிறார்கள்
முன்னதாக நிரந்தர வீடு பெற்றவர்கள் நேரடியாக அரசுக்கு வாடகையை கட்டிய சூழலில், இப்போது நம் குடியிருப்பு நம் பொறுப்பு திட்டம் வாயிலாக குடியிருப்பு சங்க தலைவரிடம் வாடகையை கட்டுவதாக சொல்கிறார்கள்.
அப்படி நிர்வாகம் மாறும் போது தாங்கள் புறக்கணிக்கப்படுவதாக சொல்லும் அவர்கள், நிரந்தர வீடு இல்லாதோர் வாடகை கட்ட வேண்டாம் என அதிகாரிகள் சொல்கிறார்கள்... ஆனால் சங்க தலைவர் வாடகையை கட்ட சொல்கிறார் எனவும் குமுறுகிறார்கள்...
இப்படி தவிக்கும் குடும்பங்களுக்கு உதவியை மேற்கொள்ளும் தொண்டு நிறுவனத்தை சேர்ந்த மெர்சி பேசுகையில், அதிகாரிகள் பதில் ஏமாற்றம் அளிப்பதாக தெரிவித்தார்
இதுதொடர்பாக நகர்புற வாழ்விட மேம்பாடு வாரிய அதிகாரிகளிடம் பேசியபோது, தேர்தல் நடத்தை விதிகள் காரணமாக நடவடிக்கை எடுக்க முடியவில்லை என்றும் தேர்தல் முடிவுகள் வெளியானதும் பயோமெட்ரிக் தகவல்களை பதிவு செய்து நிரந்தர வீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.
பிறந்த இடத்தையும், வாழ்வாதாரத்தையும் இழந்து நிற்கும் அவர்கள் கோரிக்கை எல்லாம்... தங்களுக்கு நிரந்தர வீட்டை உறுதி செய்வதோடு, கல்வி... சுகாதாரம்... வேலைவாய்ப்பை உறுதிப்படுத்த வேண்டும் என்பதாகவே இருக்கிறது.
தந்தி செய்திகளுக்காக ஒளிப்பதிவாளர் நெப்பொலியனுடன் செய்தியாளர் சதீஷ் முருகன்...