புதிய சுகாதார காப்பீட்டு திட்ட கால அவகாசம் நீட்டிப்பு
அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான புதிய சுகாதார காப்பீட்டு திட்டத்தின் கால அவகாசத்தை ஓராண்டுக்கு நீட்டித்து அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்காக அரசாணையும் வெளியிடப்பட்டு உள்ளது.
ஜூன் 30 ஆம் தேதியுடன் முடிவடையும் அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான புதிய சுகாதார காப்பீட்டுத் திட்டத்தின் கால அவகாசத்தை ஓராண்டுக்கு நீட்டித்து அரசு உத்தரவிட்டுள்ளது.இதன்படி அடுத்தாண்டு ஜூன் 30 வரை இந்த திட்டப் பலன்கள் அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு கிடைக்கும். மேலும் இந்த காப்பீடு திட்டத்தில் கொரோனா நோய் சிகிச்சையும் கொண்டு வரப்பட்டு உள்ளது. செயற்கை சுவாச வசதி இன்றி அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்படும் நபர்களுக்கு நாள் ஒன்றுக்கு ஆறாயிரத்து 500 ரூபாயும், செயற்கை சுவாச கருவி வசதியுடன் உள்ள அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்படும் நபருக்கு, நாள் ஒன்றுக்கு எட்டாயிரத்து 500 ரூபாயும் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. தீவிர கொரோனா தொற்று இல்லாத நிலையில் தனியார் கிரேடு 1 மற்றும் 2 மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுவோருக்கு மருந்து செலவுடன் ஒன்பதாயிரத்து 500 ரூபாயும், கிரேடு 3 முதல் 6 நிலைகளில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படும் நபர்களுக்கு மருந்து மற்றும் 7 ஆயிரத்து 500 ரூபாய் நாள் ஒன்றுக்கு காப்பீடு திட்டம் மூலம் கிடைக்கும். கொரோனா சிகிச்சைக்கு 4 லட்சம் ரூபாய் அதிகப்பட்ச வரம்பு நிர்ணயம் செய்யப்பட்டு அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.