திருப்பதி லட்டில் மாட்டுக்கொழுப்பு...தமிழகத்தில் 14 மணி நேரம் ரெய்டு...வெளியான அதிமுக்கிய தகவல்
திருப்பதி லட்டு விவகாரத்தில், உச்ச நீதிமன்றம் நியமித்த குழுவைச் சேர்ந்த அதிகாரிகள் உட்பட 14 பேர் திண்டுக்கல் உள்ள ஏ.ஆர். டெய்ரி ஃபுட் நிறுவனத்தில் 14 மணி நேரம் ஆய்வு மேற்கொண்டனர்.திருப்பதி வெங்கடாசலபதி கோவிலில் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும் லட்டு தயாரிப்பதற்காக, கடந்த ஏப்ரல், மே, ஜூன் ஆகிய மாதங்களில் திண்டுக்கல்லில் உள்ள ஏ.ஆர். டெய்ரி ஃபுட் நிறுவனத்தில் இருந்து நெய் அனுப்பப்பட்டது.
அந்த நெய்யில் விலங்கு கொழுப்பு இருந்ததாக புகார் எழுந்த சம்பவம், நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் தொடர்பாக ஆந்திர அரசு 5 பேர் கொண்ட விசாரணை குழுவை அமைத்து, அந்த குழு விசாரணை மேற்கொண்டு வந்தது. அந்தக் குழவை கலைத்த உச்சநீதிமன்றம், மத்திய உணவு பாதுகாப்புத்துறை சார்பில் 5 பேர் கொண்ட குழுவை அமைத்து விசாரணை நடத்த உத்தரவு பிறப்பித்தது. இந்நிலையில், உச்ச நீதிமன்றம் அமைத்த குழுவைச் சேர்ந்த அதிகாரிகள் 3 பேர் தலைமையில் 14 பேர் கொண்ட குழுவினர், ஏ.ஆர்.டைரி ஃபுட் நிறுவனத்தில் ஆய்வு மேற்கொண்டனர். மதியம் 12 மணிக்கு ஆய்வை தொடங்கிய அவர், இரவு 1.30 மணி வரை 14 மணி நேரத்திற்கு மேலாக ஆய்வு செய்து மற்றும் விசாரணை மேற்கொண்டனர். பின்னர், நிறுவனத்தில் இருந்து பல்வேறு பொருட்களை ஆய்விற்காக எடுத்துச் சென்றுள்ளனர். மேலும், கணக்குகள் ஏடுகள் மற்றும் பல்வேறு ஆவணங்களை சேகரித்து எடுத்து சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.