"சிறுபான்மை மக்களின்அரணாக அ.தி.மு.க. செயல்படும்" - அக்கட்சி தலைமை அறிவிப்பு
சிறுபான்மை சமூக மக்களின் நம்பிக்கைகுரிய அரணாக அதிமுக எப்போதும் செயல்படும் என்று அக்கட்சி தலைமை தெரிவித்துள்ளது.
அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும் , துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வமும் அக்கட்சி இணை ஒருங்கிணைப்பாளரும் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமியும் கூட்டாக வெளியிட்டுள்ள
அறிக்கையில், சிறுபான்மை மக்களின் நலன் காக்க அதிமுக எப்போதும் உறுதியாய் பாடுபடும் என்று தெரிவித்துள்ளனர். அதிமுக அரசுக்கு மக்களின் பேராதரவு பெருகி வருவதை பொறுத்து கொள்ள முடியாமல் பொய் பிரசாரங்களை தூண்டி விட்டு இஸ்லாமிய மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்த திமுக முயற்சிப்பதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
2003 - ஆம் ஆண்டு மத்தியில் திமுக அங்கம் வகித்த பாஜக ஆட்சியின் போது என்.பி.ஆர் மற்றும் தேசிய அடையாள அட்டைகள் வழங்க ஏதுவாக குடியுரிமை சட்டத்தில் விதிகள் உருவாக்கப்பட்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய மக்கள் தொகை பதிவேட்டில் இந்தியாவில் 6 மாதமோ, அதற்கு மேலோ வசிக்கின்ற அனைத்து நபர்களின் விவரங்கள் ஆவணங்கள் ஏதுமின்றி குடும்பத்தினர் தெரிவிகும் தகவலின்படி பதிவு செய்யப்படுவதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது. தாய்மொழி, தாய்,தந்தை பிறந்த இடம், ஆதார் கைப்பேசி உள்ளிட்ட விவரங்களை 2020ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் போது தவிர்க்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி மத்திய அரசுக்கு தமிழக அரசு கடிதம் எழுதி உள்ளதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.