பெண் செயலாளருக்கு பாலியல் தொல்லை - அகில இந்திய இந்து மகா சபா தலைவர் மீது வழக்கு
அகில இந்திய இந்து மகா சபா பொதுச் செயலாளருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக அந்த அமைப்பின் தலைவர் ஸ்ரீகண்டன் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
அகில இந்திய இந்து மகாசபா பொதுச் செயலாளர் நிரஞ்சனி, சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் கொடுத்த புகாரில், 2016 ஆம் ஆண்டு முதல் இந்து மகாசபா மகளிர் அணியில் இணைந்து பணிபுரிந்து வந்ததாக தெரிவித்துள்ளார்.
ஒரு கட்டத்தில் தன்னை பொதுச் செயலாளராக, தலைவர் ஸ்ரீகண்டன் நியமித்ததாகவும், அதனைத் தொடர்ந்து, தனக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுக்கத் தொடங்கியதாகவும் நிரஞ்சனி தெரிவித்துள்ளார்.
தமக்கு மன உளைச்சலை ஏற்படுத்தியதோடு, ஒருகட்டத்தில் அவரது பேச்சை கேட்காத நிலையில் மிரட்டியதாகவும் புகாரில் அகில இந்திய இந்து மகாசபா பொதுச் செயலாளர் நிரஞ்சனி தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து பாலியல் தொந்தரவு கொடுத்த நிலையில், தனது பொதுச் செயலாளர் பதவியை 2019ஆம் ஆண்டு நவம்பரில் ராஜினாமா செய்ததாகவும், டெல்லியில் அமைப்பு தொடர்பான வேலைகளை முடித்துத் தருமாறு தொடர்ந்து வற்புறுத்தி வந்ததாகவும் நிரஞ்சனி புகாரில் தெரிவித்துள்ளார்.
தனது சகோதரர் திருமணத்திற்குப் பிறகு செய்து தருவதாக தெரிவித்த நிலையில், உறவினர்கள் மற்றும் சகோதரர்கள் இடையே தன்னைப் பற்றி அகில இந்திய இந்து மகாசபா தலைவர் ஸ்ரீகண்டன் அவதூறு பரப்பியதாக நிரஞ்சனி தெரிவித்துள்ளார்.
அரசியல் பின்புலம் உடைய ஸ்ரீகண்டன் மூலம் தனக்கு மிரட்டல் வருவதால், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என நிரஞ்சனி கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்த புகாரின் அடிப்படையில், கீழ்பாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தி, பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.