கியார் புயல் : கன்னியாகுமரி மாவட்டத்தில் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது - அமைச்சர் ஜெயக்குமார்
கியார் புயல் காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் மீன்வளத்துறை சார்பில் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
அரபிக்கடலில் நிலை கொண்டுள்ள குறைந்த காற்றழுத்த பகுதி வலுப்பெற்று கியார் புயலாக மாறி உள்ளதாக திருவனந்தபுரம் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதையடுத்து கன்னியாகுமரி மாவட்ட மீனவர்களுக்கு புயல் குறித்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மீன்வளத்துறை சார்பில் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
குளச்சல் மீன்துறை உதவி இயக்குனர் அலுவலகத்தில் 24 மணி நேரமும் செயல்பட்டு வரும் கட்டுப்பாட்டு அறை நிறுவப்பட்டுள்ளதாகவும் , வானிலை எச்சரிக்கை தொடர்பான விரிவான செய்தி குறிப்பு அனைத்து மீனவர் சங்கங்களுக்கும் வழங்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். புதிய புயல் சின்னத்தை தொடர்ந்து மீன்துறை கூடுதல் இயக்குனர் தலைமையில் 35 துறை அலுவலர்களை கொண்ட 10 குழுக்கள் கன்னியாகுமரி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.