"அ.தி.மு.க. ஆட்சியில் கட்டப்பட்ட தடுப்பணை எத்தனை?" - தி.மு.க. பொருளாளர் துரைமுருகன் கேள்வி
எட்டு ஆண்டு கால அ.தி.மு.க. ஆட்சியில் எத்தனை தடுப்பணைகள் கட்டப்பட்டது? என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு, தி.மு.க. பொருளாளர் துரைமுருகன் கேள்வி எழுப்பி உள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், காவிரிப் பிரச்சினை குறித்து முழு விவரம் தெரியாமல், சேலம் வீரபாண்டியில் நடந்த அரசு விழாவில் முதலமைச்சர் பேசியுள்ளதாக குற்றம்சாட்டி உள்ளார். காவிரியில் நீரை சேமிக்க அ.தி.மு.க. அரசிடம் உரிய திட்டம் இல்லாததால், காவிரியில் திறக்கப்படும் நீர் வீணாக கடலில் கலந்து வருவதாகவும், இதனை சுட்டிக்காட்டி எதிர்க்கட்சித் தலைவருக்கு பதில் அளிப்பதாக நினைத்து, முதலமைச்சர் தவறாக கேள்வி எழுப்பி உள்ளதாக துரைமுருகன் சுட்டிக்காட்டி உள்ளார். பொதுப்பணித்துறையை தன் கட்டுப்பாட்டில் வைத்துள்ள முதலமைச்சருக்கு, மாயனூர் தடுப்பணை தி.மு.க. ஆட்சியில் கட்டப்பட்டது தெரியாதா? என துரைமுருகன் கேள்வி எழுப்பியுள்ளார். அ.தி.மு.க ஆட்சியில் கடந்த எட்டாண்டுகளில் காவிரியில் எத்தனை தடுப்பணைகள் கட்டப்பட்டு உள்ளது எனவும், தி.மு.க. ஆட்சியில் 40 அணைகள் கட்டப்பட்டதாகவும், அ.தி.மு.க. ஆட்சியில் கட்டப்பட்ட ஒரு அணையை காட்ட முடியுமா? என துரைமுருகன் சவால் விடுத்துள்ளார். எதிர்க்கட்சித் தலைவர் கூறிய குற்றச்சாட்டுக்கு பதில் சொல்லாமல், தி.மு.க ஆட்சியில் காவிரியில் தடுப்பணையே கட்டப்பட வில்லை என்று உண்மைக்குப் புறம்பாக முதலமைச்சர் பேச கூடாது என்றும் துரைமுருகன் குறிப்பிட்டுள்ளார்.