திருப்போரூரில் அமைகிறதா 2-வது விமான நிலையம்? - 6 இடங்கள் பரிசீலனையில் உள்ளதாக தகவல்
சென்னையில் இரண்டாவது விமான நிலையம் அமைக்க திருப்போரூர் உள்ளிட்ட ஆறு இடங்கள் பரிசீலனையில் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
சென்னை விமான நிலையத்தில் இன்னும் 2 ஆண்டுகளில் பயணிகள் வரத்து மற்றும் புறப்பாடு அதிகரிக்கும் என்பதால் இரண்டாவது விமான நிலையம் அமைக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. விமான நிலையம் அமைக்க இரண்டாயிரத்து 500 ஏக்கர் வரை நிலம் தேவைப்படும் என அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். இதற்காக வளத்தூர், தொடூர், செய்யூர், திருப்போரூர், மதுரமங்கலம், மப்பேடு ஆகிய இடங்கள் பரிசீலனையில் உள்ளதாக கூறப்படுகிறது.
திருப்போரூர் பகுதியில் உப்பு உற்பத்தி செய்வதற்காக மாருதி மரைன் எனும் நிறுவனத்திற்கு குத்தகைக்கு விடப்பட்டிருந்தது.சுமார் 36 ஆயிரத்து 12 ஏக்கர் அரசு நிலம் குத்தகை காலம் முடிந்து தற்போது காலியாக உள்ளது. மேலும் கிழக்கு கடற்கரை சாலை, பழைய மாமல்லபுரம் சாலை மற்றும் செங்கற்பட்டு தேசிய நெடுஞ்சாலை ஆகியவற்றுக்கு மத்தியில் திருப்போரூரில் இந்த நிலம் உள்ளதால் போக்குவரத்து வசதிகளுக்கு சிரமம் இருக்காது என கூறப்படுகிறது. இள்ளலூர், பையனூர் ஆகிய பகுதிகளில் விமான நிலைய குடியிருப்புகள் உருவாக்குவதற்கான நிலங்களும் கண்டறியப்பட்டு உள்ளதாக கூறப்படும் நிலையில் திருப்போரூர் பகுதியில் சென்னையின் இரண்டாவது விமான நிலையம் அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் உள்ளதாக கூறப்படுகிறது. சிவில் விமான போக்குவரத்து ஆணையரக அதிகாரிகளின் ஆய்வுக்கு பின்னர் எங்கு விமான நிலையம் அமைகிறது என்பது தெரிய வரும்.