சூடுபிடிக்கும் தேர்தல் களம் : கட்சிகளின் நூதன பிரச்சாரம்
தேர்தல் களத்தில் அனல் பறக்கிறது எப்படியாவது வெற்றி பெற்று விட வேண்டும் என, கட்சித் தலைமை முதல், கடைக்கோடி தொண்டர் வரை ஓடியாடி பிரச்சாரம் செய்து கொண்டிருக்கின்றனர்.
வயதையும் பொருட்படுத்தாமல் நடனமாடிய மூதாட்டி
நாகையில், ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ பிரசாரம் செய்ய வந்தார். முன்னதாக, வயதான மூதாட்டி, இளைஞர் ஒருவருடன் நடனமாடி அசத்தினார். நீண்ட நேரம் சோர்வடையாமல் மூதாட்டி ஆடியது, பொதுமக்களைக் கவர்ந்தது.
மக்கள் நீதி மய்யம் சார்பில் கரகம் எடுத்து நடனமாடிய கலைஞர்கள்
திண்டுக்கல்லில் நடைபெற்ற மக்கள் நீதி மய்யம் பிரச்சார கூட்டத்தில் கரகாட்டம் களை கட்டியது. பொது மேடையில் சளைக்காமல், தலையில் கரகம் வைத்து ஆடிய கலைஞர்களின் நடனம், அனைவரையும் கவர்ந்தது.
பர்தா அணிந்து வாக்கு சேகரித்த அமமுக வேட்பாளர்
வேலூர் மாவட்டம் குடியாத்தம் இடைத்தேர்தலில், அ.ம.மு.க. வேட்பாளர் ஜெயந்தி பத்மநாபன், இஸ்லாமிய சமூகத்தினர் அதிகமாக வசிக்கும் பகுதியில் வாக்கு சேகரித்தார். அப்போது, பர்தா அணிந்து வந்திருந்த அவரை, அங்கிருந்தவர்கள் சுல்தானா என்று அழைத்தனர்.
வெற்றிலை, பாக்குடன் தாமரை பூவை வழங்கிய தொண்டர்கள்
சிவகங்கை தொகுதியில், பா.ஜ.க. வேட்பாளர் ஹெச்.ராஜாவை ஆதரித்து, தொண்டர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். புதுக்கோட்டை மாவட்டத்தில், வெற்றிலை - பாக்குடன் தாமரைப்பூவை வைத்து, வாக்காளர்களைக் கவர்ந்தனர்.