கஜா புயல் பாதிப்பிலிருந்து மீளாத கரும்பு விவசாயிகள்...
கரும்பு இல்லாத பொங்கல் பண்டிகையை நினைத்துகூட பார்க்க முடியாதுதான், ஆனால் அந்த கரும்பை பயிரிடும் விவசாயிகளோ இந்த ஆண்டு மீள முடியாத சோகத்தில் உள்ளனர்.
திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த வளநாடு, பாலக்குறிச்சி பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் கரும்பு பயிரிட்டு வருகின்றனர். இந்நிலையில் இந்த ஆண்டு பயிரிடப்பட்ட கரும்புகள் அறுவடைக்குத் தயாரான நிலையில் கஜா புயலால் கடும் சேதத்தை கண்டன. புயலுக்கு பின்னர் எஞ்சியவற்றை நிமிர்த்து வைத்து பராமரித்தாலும் எதிர்பார்த்த விளைச்சல் இல்லை என்றும், பொங்கலுக்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் கரும்பின் அடர்த்தி குறைவாக உள்ளதால் விலை குறையும் என்றும் வேதனையோடு கூறுகின்றனர். இதனால் இந்த ஆண்டு பொங்கல் பண்டிகை மகிழ்ச்சியாக இருக்காது என்று கூறியதுடன், கஜா பாதிப்பிலிருந்து மீள நிவாரண உதவிகளை உடனடியாக அளிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.