எல்லா நம்பிக்கையும் உடைந்த போது மேட்சையே புரட்டி போட்ட ஒரு கேட்ச்..நின்று துடித்த 100 கோடி இதயங்கள்

Update: 2024-06-30 05:30 GMT

எல்லா நம்பிக்கையும் உடைந்த போது

மேட்சை தலைகீழாய் புரட்டிய ஒரு கேட்ச்

நின்று துடித்த 100 கோடி இதயங்கள்

கடைசி நொடி வரை திக்.. திக்..

17 ஆண்டுகளுக்குப் பிறகு டி20 உலகக்கோப்பையை வென்று இந்தியா வரலாறு படைத்துள்ளது. பார்படாஸில் நடைபெற்ற பரபரப்பான இறுதிப்போட்டியில் ரோகித் படை வெற்றிக்கொடி நாட்டியது குறித்து விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு...

ஒவ்வொரு முறையும் இதயங்கள் நொறுங்கிப் போகின்றன. மனங்கள் ரணமாகின்றன. நூலிழையில் கோப்பை கைநழுவிச் சென்று சரித்திரம் மாற்றி எழுதப்படுகிறது. இம்முறை நிச்சயம் இதனை மாற்ற வேண்டும் என்ற எண்ணத்துடன் பார்படாஸில் நடைபெற்ற டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்தியாவும் தென் ஆப்பிரிக்காவும் களம் கண்டன.

மிக முக்கியமான டாஸை இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா வென்று எதிர்பார்த்தபடியே பேட்டிங் தேர்வு செய்தார்.

யான்சன் வீசிய ஆட்டத்தின் முதல் ஓவரில் 3 பவுண்டரிகளை விரட்டிய கோலி தனது ஃபார்ம் குறித்த விமர்சனங்களுக்கு பதிலடி தந்தார். மறுமுனையில் கேசவ் மகராஜ் ஓவரில் அட்டகாசமாக அடுத்தடுத்து 2 பவுண்டரிகள் அடித்த ரோகித், ஸ்வீப் ஆடி விக்கெட்டை பறிகொடுத்தார். அடுத்து வந்த பண்ட்டும் ரோகித்தின் நீட்சியாக ஆட்டமிழக்க, சூர்யகுமார் யாதவ் 3 ரன்களில் கேட்ச் ஆனார். 40 ரன்களுக்குள் 3 விக்கெட்டுகளை இழந்து இந்தியா தடுமாறியது.

அப்போது யாருமே எதிர்பாராத வகையில் களம் புகுந்த அக்சர் படேல் அநாயசமாக சிக்சர்களை பறக்கவிட்டார். அவருடன் இணைந்து கோலி நிதானம் காட்ட இந்திய அணி சரிவில் இருந்து மீண்டது. ஆனால் அக்சர் படேல் 47 ரன்களில் துரதிர்ஷ்டவசமாக ரன் அவுட் ஆனார். மறுமுனையில் விராட் கோலி அரைசதம் அடித்தார்.

அரைசதம் அடித்த பின் கோலியின் வேகம் கூடியது. இறுதிப்போட்டிக்காக கோலி ஆட்டத்தை சேமித்து வைத்திருக்கிறார் என ரோகித் கூறிய வார்த்தைகள் நிரூபணம் ஆகின. ரபாடா ஓவரில் பவுண்டரிகளை விளாசிய கோலி 76 ரன்களில் ஆட்டமிழந்தார். அவருடன் இணைந்து ஆடிய துபே 27 ரன்கள் சேர்க்க 20 ஓவர்களில் இந்தியா 7 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் சேர்த்தது.

பார்படாஸ் மைதானத்தில்... அதுவும் இறுதிப்போட்டியில்...177 ரன்கள் என்பது கடினமான இலக்கு.... சேஸிங்கை தொடங்கிய தென் ஆப்பிரிக்க அணியில் ரீஸா ஹென்ட்ரிக்ஸ், பும்ராவிடமும் கேப்டன் மார்க்ரம், அர்ஷ்தீப்பிடமும் ஆரம்பத்திலேயே வீழ்ந்தனர். அதன்பின் டிகாக், ஸ்டப்ஸ் ஜோடி தென் ஆப்பிரிக்காவை சரிவில் இருந்து மீட்டது.

இருவரும் சில பவுண்டரிகளை விளாசிய நிலையில் அக்சர் ஓவரில் தவறான ஷாட் தேர்வால் ஸ்டப்ஸ் போல்டானார். அடுத்து களமிறங்கிய கிளாசென் இந்திய ஸ்பின்னர்களின் ஓவர்களை சிக்சர்களாக சிதறடித்தார். ஒருபுறம் 39 ரன்களுக்கு டிகாக் ஆட்டமிழக்க மறுபுறம் அதிரடி அரைசதம் விளாசினார் கிளாசென். இதனால் இலக்கை நெருங்கியது தென் ஆப்பிரிக்கா...

24 பந்துகளில் 26 ரன்கள் தேவை என்ற நிலை... இக்கட்டான நேரத்தில் ஹர்திக் பாண்டியாவிடம் பந்தை தந்தார் ரோகித். 17வது ஓவரில் முதல் பந்திலேயே கிளாசெனின் விக்கெட்டை வீழ்த்தி திருப்புமுனை தந்த பாண்டியா, அந்த ஓவரில் வெறும் 4 ரன்களை மட்டும் விட்டுகொடுத்து நெருக்கடியை தொடங்கி வைத்தார்.

18வது ஓவரில் பும்ராவைப் பயன்படுத்தி கேப்டன்ஸியில் ரோகித் சர்மா மாஸ் கட்டினார். அந்த ஓவரில் யான்செனை ஸ்டம்புகள் சிதற வெளியேற்றிய பும்ரா, வெறும் 2 ரன்கள் மட்டுமே வழங்கினார். தென் ஆப்பிரிக்காவிற்கு அழுத்தம் அதிகரித்தது. மில்லர் மட்டுமே அவர்களின் ஒற்றை நம்பிக்கையாக நின்றார்.

அடுத்து 19வது ஓவரில் அர்ஷ்தீப்பும் அபாரமாக பந்துவீசி வெறும் 4 ரன்கள் மட்டுமே அளிக்க ஆட்டம் இந்தியா பக்கம் திரும்பியது. கடைசி ஓவரில் தென் ஆப்பிரிக்காவிற்கு 16 ரன்கள் தேவை... low full toss ஆக பாண்டியா வீசிய முதல் பந்தை long off திசையில் மில்லர் அடிக்க, எல்லைக்கோட்டருகே அநாயசமாக கேட்ச் பிடித்து ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகையும் சூர்யகுமார் யாதவ் வியக்க வைத்தார். சூர்யகுமார் யாதவ் பிடித்தது கேட்ச் மட்டுமல்ல... டி20 உலகக்கோப்பையையும்தான்...

ஆம்..... அடுத்தடுத்த பந்துகளையும் அழுத்தமில்லாமல் பாண்டியா வீச 20 ஓவர்கள் முடிவில் தென் ஆப்பிரிக்கா 8 விக்கெட் இழப்புக்கு 169 ரன்கள் எடுத்தது. 7 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்ற இந்தியா 17 ஆண்டுகளுக்குப் பிறகு டி20 உலகக்கோப்பையை வசப்படுத்தியது. ரசிகர்களின் நெடுநாள் ஏக்கம் தணிந்தது.

11 ஆண்டுகள் ஐசிசி கோப்பைக்காக ஏங்கித் தவித்த இந்திய ரசிகர்களுக்கு விடை கிடைத்துவிட்டது. கடந்த கால காயங்களுக்கு களிம்பு பூசப்பட்டுவிட்டது. ஆறா ரணங்கள் ஆற்றுப்படுத்தப்பட்டுவிட்டது. மாபெரும் மீட்பராக மாறி மீண்டும் இந்தியாவிற்கு கோப்பையைக் கொண்டு வந்துள்ளார் ரோகித் சர்மா... ஒன்றல்ல... இரண்டல்ல... 140 கோடி இதயங்களின் வெற்றி இது....

Tags:    

மேலும் செய்திகள்