இடையூறாக உள்ள நக்கீரர் நுழைவாயிலை அப்புறப்படுத்த உத்தரவிட கோரி உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.ஜைனப் பீவி என்பவர் தாக்கல் செய்த மனுவில், மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்திற்கு எதிரே உள்ள நக்கீரர் நுழைவாயினால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, ஏராளமான விபத்து நடைபெற காரணமாக உள்ளதால், அதை அகற்ற உத்தரவிட கோரியுள்ளார். நினைவு சின்னமாக உள்ள நுழைவு வாயிலை இடிக்க கூடாது என கூறி, முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் சார்பில் இடையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இதனால் கோபமடைந்த நீதிபதிகள், அந்த நுழைவாயிலை மனுதாரர் பாதுகாக்க நினைத்தால், மாட்டுத்தாவணி எதிரே இருபுற சாலைகளிலும் உள்ள இடங்களை விலைக்கு வாங்கி அரசிடம் ஒப்படைக்கலாம் என கூறினர். ஆர்.பி. உதயகுமார் தரப்பில், வழக்கை திங்கள்கிழமைக்கு ஒத்தி வைத்தால் உரிய ஆவணங்களை தாக்கல் செய்வதாக தெரிவித்தனர். வழக்கை திங்கட்கிழமைக்கு ஒத்தி வைத்த நீதிபதிகள் மனுதாரருக்கு அபராதம் விதிக்க நேரிடும் என எச்சரிக்கை செய்தனர்.