2 ஆண்டுகளுக்கு பிறகு திடிரென குறையும் அணையின் நீர்மட்டம் - பேரதிர்ச்சியில் விவசாயிகள்
கேஆர்பி அணையின் நீர்மட்டம் 2 ஆண்டுகளுக்குப் பிறகு மளமளவென குறைந்து வருவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.கடந்த 2 ஆண்டுகளாக அணையின் நீர்மட்டம் முழுக்கொள்ளளவான 52 அடிக்குக் குறையாமல் இருந்து வந்தது... இந்தாண்டு வடகிழக்கு பருவமழை எதிர்பார்த்த அளவு இல்லை... தற்பொழுது கோடை காலம் துவங்கியுள்ளது... தென்பெண்ணை ஆற்றில் நீர்வரத்து முற்றிலும் இல்லாத சூழ்நிலையில் கேஆர்பி அணையின் நீர்வரத்து கடந்த சில நாட்களாக வெகுவாக குறைந்து வருகிறது. இன்று காலை நிலவரப்படி அணைக்கு நீர்வரத்து 38 கன அடியாக உள்ளது. அணையிலிருந்து 194 கன அடி நீர் திறக்கப்பட்டு வருகிறது. 52 அடி உயரத்தில் இருந்த நீர்மட்டம் தற்போது 46 அடி அளவிற்கு குறைந்துள்ளது. தென்மேற்கு பருவமழை துவங்க இன்னும் சில மாதங்கள் உள்ள நிலையில் அணையின் நீர்மட்டம் அதிக அளவில் குறைந்து வருவதால் பாசன விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். கடந்த 2 ஆண்டுகளாக கடல் போல் காட்சி அளித்த கேஆர்பி அணையின் நீர்த்தேக்க பகுதிகள் தற்போது வறண்டு காட்சியளிக்கின்றன... எதிர்பார்த்த அளவு வரும் காலங்களில் மழை பெய்யவில்லை எனில் முதல் போக சாகுபடி பெருமளவில் பாதிப்பு அடையும் என விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.