`ED' கைது செய்தும் `டைகரை' இறக்கி தலைப்பு செய்தியை தலைகீழாக்கிய ஜார்கண்ட் முதல்வர்
நாடாளுமன்ற தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் வேளையில், பல அரசியல் திருப்பங்கள் அரங்கேறி வருகின்றன...
அந்த வகையில் ஜார்க்கண்ட் மாநிலத்தின் முதலமைச்சராக இருந்த ஹேமந்த் சோரன், அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட செய்திதான் நாடு முழுக்க இன்றைய தலைப்புச் செய்தி.
ஹேமந்த் சோரன் கைதுக்கான சமிஞை முன்னரே தெரிந்த நிலையில், ஜார்க்கண்ட் முதலமைச்சர் அரியணையை அலங்கரிக்கப் போவது யார் என்ற கேள்வி எழுந்தது.
அப்போது ஹேமந்த் சோரனின் மனைவி கல்பனா சோரனின் பெயரும், அமைச்சராக இருந்த சம்பாய் சோரனின் பெயரும்தான் அடிபட்டது.
ஆனால் பெரும்பான்மை எம்எல்ஏக்களின் ஆதரவு சம்பாய் சோரனுக்கே இருந்ததால், அவரே முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்டார்.
சம்பாய் சோரனுக்கு சொந்த கட்சியினர் பெரும் ஆதரவு கரம் நீட்ட, அவரது கடந்த கால நடவடிக்கைகள்தான் காரணம்.
1961ஆம் ஆண்டு சரைகேலா-கர்சவான் மாவட்டத்தில் உள்ள ஜிலிங்கோடா கிராமத்தில் பழங்குடி சமூகத்தில் பிறந்தவர் சம்பாய் சோரன்.
தந்தை சிமால் சோரன் விவசாய தொழில் செய்து வந்தவர். 10ம் வகுப்பு வரை படித்து முடித்த நிலையில், இளம் வயதில் திருமண வாழ்க்கையில் தள்ளப்பட்டார் சம்பாய் சோரன். தற்போது அவருக்கு 4 மகன்கள், 3 மகள்கள் உள்ளனர்.
1990களில் ஜார்க்கண்ட் தனி மாநில கோரிக்கை தலைதூக்கியது. அப்போதே சம்பாய் சோரனின் அரசியல் வாழ்க்கையும் தொடங்கியது...
ஜார்க்கண்ட் இயக்கத்தின் சார்பில் தனி மாநில கோரிக்கை கேட்டு போராடிதில் சம்பாய் சோரனுக்கு முக்கிய இடம் உண்டு. இதனால், ஜார்க்கண்ட் டைகர் என மக்களால் அழைக்கப்பட்டார், சம்பாய் சோரன்.
வளமான கனிம வளங்களை கொண்ட ஜார்க்கண்ட் மாநிலத்தில் பழங்குடி மற்றும் பட்டியலின மக்கள் அதிகம். பெரும் போராட்டத்திற்கு பின் கடந்த 2000ல் ஜார்க்கண்ட மாநிலம் உதயமானது.
சரைக்கேலா தொகுதியில் நடந்த இடைத்தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட்ட சம்பாய் சோரனுக்கு வெற்றியை பரிசாக தந்தனர் அந்த தொகுதி மக்கள். அன்று துவங்கி இன்று வரை 7 முறை எம்எல்ஏவாக வெற்றி பெற்றிருக்கிறார்
அர்ஜுன் முண்டா தலைமையிலான பாஜக ஆட்சியில் சம்பாய் சோரன் அமைச்சராக நியமிக்கப்பட்டார்.
பின்னர் வந்த ஹேமந்த் சோரன் தலைமையிலான இந்த ஆட்சியில், பழங்குடி மற்றும் பட்டியலின மக்கள் நலத்துறை, போக்குவரத்துத் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார்.
சம்பாய் சோரனின் எதிரில் அரசியல் ரீதியாகவும், ஆட்சி ரீதியாவும் பெரும் சவால்கள் காத்திருக்கும் நிலையில், அதை எப்படி எதிர்கொள்வார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.