மிதக்கும் சொர்க்கத்தில் அம்பானி மகனின் Pre Wedding.. கூடும் 800 பிரபலங்கள்..ஒவ்வொரு வேளைக்கு ஒவ்வொரு டிரஸ் கோடு - மூக்கின் மேல் விரல் வைக்கும் உலகம்
உலக கோடீஸ்வரர்களுள் ஒருவரான முகேஷ் அம்பானியின் இளைய மகனான ஆனந்த அம்பானியின் இரண்டாவது திருமண முன்வைபவம் இன்று மதிய விருந்துடன் இத்தாலியில் தொடங்குகிறது. கடந்த ஜனவரி மாதம் ஆனந்த அம்பானி - ராதிகா மெர்ச்சன்ட் தம்பதியின் நிச்சயதார்த்தம் முடிந்த நிலையில், வருகின்றன ஜூலை 12ம் தேதி அவர்களது திருமணம் நடைபெறவுள்ளது. ஜாம்நகரை தொடர்ந்து தற்போது இரண்டாவது திருமண முன்வைபவம் இத்தாலி மற்றும் பிரான்ஸில் நடக்கவுள்ளது. இத்தாலியில் மிதக்கும் சொர்க்கமான சொகுசு கப்பலில் இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. பிரம்மாண்டத்திற்கே சவால் விடும் வகையில் இன்று தொடங்கி ஜூன் 1ம் தேதி வரை நடக்கும் இந்த கொண்டாட்டத்தில் கலந்து கொள்வதற்காக தோனி, ரன்பீர் கபூர், சல்மான் கான் உள்ளிட்ட இந்திய பிரபலங்கள் பலரும் ஏற்கனவே இத்தாலி சென்றடைந்து விட்டனர். இவர்களோடு இன்னும் பல வெளிநாட்டு விஐபிகளையும் சேர்த்து மொத்தம் 800 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ள நிலையில், விருந்தோம்பலுக்காக மட்டும் 600 பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதோடு , சொகுசு கப்பலில் செல்போன் பயன்படுத்த கூடாது என்று பிரபலங்கள் உட்பட அனைவரிடமும் கேட்டு கொள்ளப்பட்டுள்ளது.
முன்னதாக நிலத்திலும் , கடலிலும் மாறி மாறி நடக்க இருக்கும் இந்த ஆடம்பர கொண்டாட்டங்களில் ஒவ்வொரு வேளைக்கு 'கிளாசிக்', 'வெர்ஸ்டன்', 'ரெட்ரோ'... என ஒவ்வொரு விதமான டிரஸ் கோடுகளை பின்பற்ற விருந்தினர்கள் கேட்டு கொள்ளப்படுள்ளனர். இத்தாலியில் இருந்து பிரான்ஸ் தெற்கே வரை அழகிய ஐரோப்பிய நகரங்கள் வழியாக பயணிக்கும் சொகுசு கப்பல் மீண்டும் இத்தாலியை வந்தடையும். இத்தாலியின் ரோம், பிரான்ஸின் கேன்ஸ், மற்றும் இத்தாலியின் போர்டோபினா நகரங்களில் சிறப்பு விருந்துக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.