137 நாட்களுக்கு பிறகு பெட்ரோல் விலை உயர்வு காரணம் என்ன ?

137 நாட்களுக்கு பிறகு பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு 76 காசுகள் உயர்த்தப்பட்டுள்ளதன் பின்னணியை இந்தத் தொகுப்பு அலசுகிறது...

Update: 2022-03-22 16:29 GMT
137 நாட்களுக்கு பிறகு பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு 76 காசுகள் உயர்த்தப்பட்டுள்ளதன் பின்னணியை இந்தத் தொகுப்பு அலசுகிறது... பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு உற்பத்திக்கான மூலப்பொருளான கச்சா எண்ணெய் தேவையில் 80 சதவீதத்தை இந்தியா இறக்குமதி மூலமே பெறுகிறது. 2021 நவம்பர் 4ஆம் தேதியில் இருந்து பெட்ரோல் விலை லிட்டருக்கு 101 ரூபாய் 40 பைசாவாகவும், டீசல் விலை லிட்டருக்கு 91 ரூபாய் 43 பைசாவாகவும் மாற்றம் எதுவும் இல்லாமல் ஒரே அளவில் தொடர்ந்தது. ஆனால் கச்சா எண்ணெய் விலை, நவம்பர் 4இல் பீப்பாய் ஒன்றுக்கு 80.54 டாலராக இருந்து, பிப்ரவரி 23இல் 94.05 டாலராக அதிகரித்தது. பிப்ரவரி 24இல் தொடங்கிய உக்ரைன் போரின் விளைவாக கச்சா எண்ணெய் விலை. மேலும் அதிகரித்து, தற்போது 119.13 டாலராக உள்ளது. ஆனால், கச்சா எண்ணெய் விலை உயர்வுக்கு ஏற்ற விகிதத்தில், பெட்ரோல், டீசல் விலைகள் உயர்த்தப்படவில்லை. இதன் காரணமாக பெட்ரோல், டீசல் உற்பத்தி நிறுவனங்களுக்கு லிட்டருக்கு 20 முதல் 25 ரூபாய் வரை இழப்பு ஏற்பட்டு வருகிறது. தற்போது அமல்படுத்தப்பட்டுள்ள 76 பைசா உயர்வு, இந்த இழப்புகளில் 10 சதவீதத்தை கூட ஈடுகட்டாது என்று பொருளியல் நிபுணர்கள் கூறுகின்றனர். பெட்ரோல், டீசல் உற்பத்தி மற்றும் விற்பனையில், மத்திய அரசின் பொதுத் துறை நிறுவனங்களான IOC, HPCL, BPCL ஆகியவற்றின் பங்கு 92 சதவீதமாகவும், ரிலையன்ஸ், எஸ்ஸார், ஷெல் உள்ளிட்ட தனியார் நிறுவனங்களின் பங்கு வெறும் 8 சதவீதமாகவும் உள்ளது. எனவே தனியார் நிறுவனங்கள், பொதுத் துறை நிறுவனங்களின் விற்பனை விலையை ஒட்டியே தம் விற்பனை விலைகளை நிர்ணயம் செய்ய வேண்டிய சூழல் உள்ளது. 2008இல் இதே போல, உற்பத்தி விலையை விட வெகு குறைவாக பொதுத் துறை நிறுவனங்கள் விற்பனை செய்ததால், நஷ்டத்தை சமாளிக்க முடியாமல் ரிலையன்ஸ் நிறுவனம் அதன் 1,432 பெட்ரோல் பங்குகளை மூடியது குறிப்பிடத்தக்கது. அப்போது எஸ்ஸார் பங்க்குகளும் மூடப்பட்டன. கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், பெட்ரோல் டீசல் விலைகள் அதற்கு ஏற்ப உயர்த்தப்படாவிட்டால், 2008இல் நடந்தது போல தனியார் பெட்ரோல் பங்குகள் மீண்டும் மூடப்படும் சூழல் உருவாகியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்