``நான் அகதி.. புள்ள அகதி..எங்களுக்கு வீடே வேண்டாம்’’'- 3500 வீடுகள் கட்டி கொடுத்த அரசுக்கு அதிர்ச்சி

Update: 2024-11-18 05:15 GMT

இலங்கையில் உள்நாட்டு போர் தொடங்கியதில் இருந்து அகதிகளாக வரத் தொடங்கிய இலங்கைத் தமிழர்கள், மறுவாழ்வு அகதிகள் முகாமில் அடிப்படை வசதிகள் இல்லை என குமுறுகின்றனர். இதன் பின்னணியை பார்க்கலாம் விரிவாக..

இலங்கையில் உள்நாட்டு போர் தொடங்கியதில் இருந்து அகதிகளாக வரத் தொடங்கிய இலங்கைத் தமிழர்கள் தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் இயங்கி வரக்கூடிய இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் வசித்து வருகின்றனர்.

அந்த வகையில் சென்னையை அடுத்த புழல் அருகே காவாங்கரை என்ற இடத்தில் செயல்பட்டு வரும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில், 350 க்கும் மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்தவர்கள் வசித்து வருகிறார்கள்.

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் வசித்து வரும் இலங்கைத் தமிழர்களுக்கு அரசு சார்பில் புதிதாக வீடுகள் கட்டித் தரப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 2 வருடத்திற்கு முன்பு சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் அறிவித்தார்.7469 வீடுகள் கட்டுவதற்கு ரூ.176 கோடி நிதி ஒதுக்கப்பட்டது.

அதில் 3510 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. மேலும் 3510 வீடுகள் கட்டுவதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. அதன் ஒரு பகுதியாக புழல் காவாங்கரையில் உள்ள முகாமில் 40 வீடுகள் கட்டப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது.

ஆனால் முகாமில் இருக்கும் பொது மக்களோ எங்களுக்கு குடியிருக்க வீடு வேண்டாம் குடியுரிமை தான் முதலில் வேண்டும் எனக் கூறுகின்றனர்.

அதே வேளையில் இப்போது நாங்கள் வசிக்கும் வீடுகளில் கழிப்பறை வசதி போதுமானதாக இல்லை என்றும், ஐந்து வீடுகளுக்கு ஒரு கழிவறை தான் உள்ளது எனவும் குமுறுகின்றனர்..

அத்துடன் புதிதாக கட்டப்படும் வீடுகளுக்காக, ஏற்கனவே இருக்கும் கழிவறையை இடித்து விட்டு கட்டுவதாக வேதனை தெரிவிக்கின்றனர்.

தற்போது வரை 4 வீடுகளின் கட்டுமான பணி 60 சதவீதம் முடிந்து இருப்பதாகவும், மீதமுள்ள 36 வீடுகளை கட்டும் பணி இப்போதுதான் தொடங்கியுள்ளதாகவும், குற்றச்சாட்டை முன்வைக்கும் மக்கள் புதிதாக கட்டப்படும் வீடுகளில் பெரிய அளவில் இட வசதி இல்லை என வேதனை தெரிவிக்கின்றனர்.

தங்கள் துயர் துடைக்கும் வகையில், போதிய வசதிகள் செய்து கொடுத்து இயல்பு வாழ்க்கை வாழ வழி வகுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கின்றனர்... 

Tags:    

மேலும் செய்திகள்