'பெஞ்சல்' புயல், கரையை கடந்தபோது, கனமழையால், திருவண்ணாமலையில் அண்ணாமலையார் மலையின் கிழக்கு பக்கத்தில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில், ஏழு பேர் மண்ணில் புதைந்து உயிரிழந்தனர். அதைத் தொடர்ந்து பல முறை மண் சரிவு ஏற்பட்டதால், அப்பகுதி மக்கள் தொடர்ந்து அச்சத்தில் உள்ளனர். இந்நிலையில், கார்த்திகை தீபம் கிரிவலத்திற்கு வந்த பக்தர்கள், நிலச்சரிவு நடந்த இடத்தில் குவிந்தனர். சரிந்து கிடக்கும் மண் மீது ஏறியும், அங்கு உள்ள பாறை மீது ஏறி நின்றும் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். சிலர் செல்பி, ரீல்ஸ் எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டனர். 7 பேர் உயிரிழந்த இடத்தை கண்காட்சியாக மாற்றியதோடு, நிலச்சரிவு ஏற்படும் என்ற அச்சம் துளியும் இல்லாமல் செல்பி, ரீல்ஸ் எடுத்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆபத்தான அந்த இடத்தில் போலீசார் யாருமே பாதுகாப்புப் பணியில் இல்லாத நிலையில், பாதுகாப்பு போட்டு, பக்தர்கள் யாரும் அங்கு செல்லாம் தடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.