திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அருகே, சிறுவன் அடித்துக் கொல்லப்பட்ட வழக்கில், 5 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
நாட்றம்பள்ளி அடுத்த நெக்குந்தி ரயில் தண்டவாளத்தில், உடல் இரண்டு துண்டான நிலையில் 17 வயது மதிக்கத்தக்க சிறுவன் இறந்து கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து சிறுவனின் உடலை ரயில்வே போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தினர். நாட்றம்பள்ளி அடுத்த அம்பலூர் பழைய காலனி பகுதியை சேர்ந்த ஜெயராஜ் என்பவரின் மகன் நரசிம்மன் என்பது தெரியவந்தது. சம்பவம் தொடர்பாக சிகரல்லப்பள்ளி அருகே உள்ள தபால் மேடு பகுதியை சேர்ந்த அப்துல் ரகுமான் என்ற சிறுவனை கைது செய்து விசாரித்ததில் திடுக்கிடும் தகவல் வெளியானது. பைக் திருட்டு சம்பவத்தில் நரசிம்மன் மற்றும் அவரது நண்பர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது நரசிம்மனை ரயில் தண்டவாள பகுதிக்கு அழைத்துச் சென்று சரமாரியாக தாக்கி கழுத்தை இறுக்கி, தலையின் பின்புறத்தில் அடித்துக்கொன்றது தெரியவந்தது. இந்நிலையில், சிறுவன் உட்பட 5 பேரை திருப்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி வேலூர் சிறையில் அடைத்தனர். முக்கிய குற்றவாளியான பிரவீன் என்கிற டின் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.