நள்ளிரவில் நெல்லையை அலற விட்ட மிரட்டல் - அங்குலம் அங்குலமாக கலெக்டர் ஆபீஸை சல்லடை போட்ட அதிகாரிகள்..
வெடிகுண்டு மிரட்டல் வந்ததை அடுத்து, நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நள்ளிரவில், அங்குலம் அங்குலமாக மோப்பநாய் உதவியுடன் வெடி குண்டு தடுப்பு பிரிவு போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டனர்.நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், இருபதுக்கும் மேற்பட்ட துறை சார்ந்த அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த நிலையில் நெல்லை மாநகர காவல் கட்டுப்பாட்டு அறைக்கு நள்ளிரவு நேரத்தில் மர்ம நபர் ஒருவர் போன் செய்து ஆட்சியர் அலுவலகத்தில் வெடிகுண்டு இருப்பதாகக்கூறி அதிர வைத்துள்ளார். உடனடியாக பரபரப்பாக செயல்படத் தொடங்கிய காவல்துறை உயரதிகாரிகள் உத்தரவுப்படி, ஆட்சியர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார் மற்றும் மோப்பநாய் வரவழைக்கப்பட்டு தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டது. அனைத்து இடங்களிலும், அங்குலம் அங்குலமாக பத்துக்கு மேற்பட்ட வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். இதனிடையே, இந்த மிரட்டல் சம்பவம் தொடர்பாக, நெல்லை பேட்டையை சேர்ந்த செய்யது முகமது என்பவரை பிடித்து போலீஸ் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.