ஈரோடு செட்டிபாளையம் தெற்கு ஸ்டேட் பேங்க் நகரில் தனியார் கட்டுமான நிறுவனம் செயல்பட்டு வருகிறது. ஈரோட்டை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் இந்த கட்டுமான நிறுவனம் சென்னை, கோவை உள்ளிட்ட நகரங்களிலும், கர்நாடகா மற்றும் வடமாநிலங்களிலும் அரசு மற்றும் தனியார் கட்டுமானங்களை செய்து வருகிறது. இந்நிலையில், வரி ஏய்ப்பு புகார் அடிப்படையில், ஈரோடு, கோவை, திருச்சி, சென்னை உள்ளிட்ட 26 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். கோவையில் இருந்து இரண்டு கார்களில் வந்த வருமான வரித்துறையினர், ஈரோட்டில் உள்ள தலைமை கட்டுமான நிறுவனத்தில் சோதனை நடத்தினர். இந்த நிறுவனத்தின் உரிமையாளர், அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு நெருங்கிய உறவினர் எனக் கூறப்படும் நிலையில், வருமான வரி சோதனை நடைபெறுவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.