வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த கிரேசி, அவரது மகள் எப்சிபா ஆகியோர், கடந்த 2 மாதங்களுக்குமுன், பட்டாபிராம் வள்ளலார் நகர் பகுதியில் வாடகை வீட்டிற்கு குடிவந்தனர். கிரேசியின் கணவர் டேவிட், மனைவி மகளை பிரிந்து, கடந்த 10 ஆண்டுகளாக ஆவடி சேக்காடு பகுதியில் தனியாக வசித்து வந்துள்ளார். அண்ணன் மற்றும் தாய் இருவரும், கிரேசியின் குடும்ப செலவுக்கு மாதந்தோறும் பணம் கொடுத்து வந்துள்ளனர். இச்சூழலில் கிரேசி, தனது தாய் மற்றும் கணவருடன் அடிக்கடி சண்டையிட்டு மருந்து சாப்பிட்டு கையை கிழித்து தற்கொலை செய்வதாக மிரட்டி வந்ததாக கூறப்படுகிறது.
கிரேசி தனிமையில் இருந்ததால் மன அழுத்தத்தில் இருந்ததாகவும் தெரிகிறது. இந்நிலையில், தாய், மகள் தற்கொலைக்கு முடிவு செய்து, இருவரும் பிரியாமல் இருக்க கட்டுக்கம்பியை உடல் முழுவதும் சுற்றிக்கொண்டு, தங்களுக்கு தாங்களே மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டனர்.
ஜன்னல் வழியாக கரும்புகை வந்ததுடன், அலறல் சத்தம் கேட்டதால் அக்கம்பக்கத்தினர் இருவரையும் மீட்க முயன்றனர். எனினும், கதவு உள்பக்கமாக தாழிட்டிருந்ததால் காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து அங்கு வந்த போலீசார்,
வீட்டின் கதவை உடைத்து, தீக்குளித்து உயிரிழந்த இருவரது உடலையும் மீட்டு, வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.