ஆன்லைன் டிரேடிங் செய்பவர்களே உஷார்... ஆசைப்பட்டு ரூ.2.22 கோடியை இழந்த இளைஞர்
வர்த்தக முதலீடு என்ற பெயரில் 2 கோடியே 22 லட்சம் ரூபாய் ஏமாற்றப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆன்லைன் வர்த்தக மோசடி அதிகரித்து வரும் நிலையில், கடந்த ஜூலை மாதம் இளைஞர் ஒருவரிடம், கேரளாவை சேர்ந்த நபர் கோடி கணக்கில் மோசடி செய்துள்ளார். சென்னையை சேர்ந்தவர் அர்ஜுன். கடந்த ஜூலை மாதம், இவரை தொலைபேசியில் தொடர்பு கொண்ட ஒரு நபர், தன்னை ஆன்லைன் வர்த்தக நிறுவனத்தில் பணி செய்வதாக அறிமுகப்படுத்திக் கொண்டார். தங்களது நிறுவனம் செபி அமைப்பின் அங்கீகாரம் பெற்றது எனக்கூறிய அந்த நபர், தங்களிடம் முதலீடு செய்தால், அதிக லாபம் ஈட்டலாம் என ஆசை வார்த்தைகள் கூறியுள்ளார். இதை நம்பிய அர்ஜூன் சம்பந்தப்பட்ட நிறுவனத்தி்ன் பல்வேறு வங்கி கணக்குகளில் 2 கோடியே 22 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் பணத்தை முதலீடு செய்துள்ளார். இந்த நிலையில், மேலும் 50 ஆயிரம் ரூபாய் ஏமாற்ற நினைத்தபோது அர்ஜூனிற்கு சந்தேகம் எழுந்து, சைபர் க்ரைம் போலீசாரிடம் இது குறித்து புகாரளித்தார். இதனை தொடர்ந்து, சைபர் க்ரைம் போலீசார் விசாரணையில் இறங்கினர். கேரளாவை சேர்ந்த உபயத்துல்லா என்பவர், போலி நிறுவன பெயரை பயன்படுத்தி, இளைஞர் அர்ஜூனிடம் பண மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதனையடுத்து. உபயத்துல்லாவை கைது செய்த போலீசார், அவரை புழல் சிறையில் அடைத்தனர்.