40 வருடம் முன் திருடிய சிறுவன் இன்று கோவை ஹோட்டல் அதிபர்.. 2024ல் திருடிய வீட்டுக்கு அடித்த ஜாக்பாட்
40 ஆண்டுகளுக்கு முன்பு, மூதாட்டி ஒருவரின் 37 ரூபாய் 50 காசை திருடிய ஒருவர் மனம் திருந்தி, இலங்கைக்கே சென்று, அவரது 3 வாரிசுகளுக்கு தலா 70 ஆயிரம் ரூபாய் என 2 லட்சத்து 10 ஆயிரம் அளித்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து பார்க்கலாம்..விரிவாக..
கோவை ரத்தினபுரி பகுதிக்கு இலங்கையில் இருந்து குடிபெயர்ந்து வந்தவர், ரஞ்சித். இவர், சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்பு 15 வயதில் இலங்கையில் இருந்தபோது, மூதாட்டி ஒருவரின் இல்லத்தில் இருந்த 37 ரூபாய், 50 காசை திருடியுள்ளார். இதன் பிறகு, இவரது குடும்பம் தமிழ்நாட்டிற்கு குடிபெயர்ந்து வரவே, கேட்டரிங் உள்பட பல தொழில்களை இவர் செய்து வருகிறார்.
இந்த சூழலில்தான், “துன்மார்க்கன் கடன் செலுத்தாமல் போகிறான்.. நீதிமான் இறங்கிப்போய் கொடுக்கிறான்“ என்ற பைபிள் வசனத்தைக் கேட்டு தனக்குள் மனமாற்றம் ஏற்பட்டதாகவும், இதனாலேயே பழக்கடை முதல் கனரா வங்கி வரை இருந்த ஒட்டுமொத்தமான கடன்களையும் அடைத்த பிறகு, மூதாட்டியின் 37 ரூபாய் 50 காசுகள் பணம் பற்றி ஞாபகம் வந்ததாகவும் கூறுகிறார், இலங்கை தமிழரான ரஞ்சித்...
இதற்காக மூதாட்டியைத் தேடி இலங்கைக்கு வந்து பார்த்த போது, அவர் இறந்துவிட்டதாக அறிந்து, அவரது குடும்பத்தினர் யார் என விசாரித்து அவர்களுக்கு சேர வேண்டிய பணத்தை திரும்பி தலா ரூ.70 ஆயிரமாக அளித்துவிட்டதாக மகிழ்ச்சியுடன் கூறுகிறார், ரஞ்சித்.
இலங்கைத் தமிழரான ரஞ்சித், கோவையில் கேட்ரிங் சர்வீஸ் மற்றும் 2 ஹோட்டல்களுக்கு உரிமையாளராக உள்ளார். சமீபத்தில் இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி உள்ளிட்டவைகளை கருத்தில் கொண்டு, அந்த பாட்டியிடம் திருடிய பணத்தை திருப்பித் தரப் போயிருந்த ரஞ்சித்தின் மனம் யாருக்கும் வராத ஒன்று...
மனம் திருந்திய இவரது செயல், 3 குடும்பத்தினரிடம் மட்டுமின்றி, பலருக்கும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது, குறிப்பிடத்தக்கது.