நெஞ்சு வலியில் துடித்த மனைவி.. ஹாஸ்பிடல் சென்றதும் கணவன் அகால மரணம்.. எமன் போட்ட விபரீத விதி கணக்கு

Update: 2024-11-07 07:20 GMT

உடல்நிலை சரியில்லாத மனைவியை காரில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் போது, வழியில் ஏற்பட்ட தகராறில் காயமடைந்த கணவன், மருத்துவமனையில் திடீரென உயிரிழந்த அதிர்ச்சி சம்பவத்தின் பின்னணியை அலசுகிறது இந்த செய்தி தொகுப்பு... ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த பாராஞ்சி பகுதியை சேர்ந்த 46 வயதான ராஜ்குமார், ஓட்டுநராக பணிபுரிந்தவர்...இவரின் மனைவி பூங்கொடிக்கு லேசான நெஞ்சு வலி ஏற்பட்டதால், அவரை பாராஞ்சியில் இருந்து கார் மூலம் அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார். அப்போது வேடல் காந்தி நகர் இடையே எதிரே வந்த மற்றொரு கார் மோதி விபத்துக்குள்ளான போது, இரு தரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பானதாக கூறப்படுகிறது.

இதில் ராஜ்குமார் குடும்பத்தினரை ஒரு சிலர் தாக்கியதாக கூறப்படும் நிலையில், தகவலறிந்து வந்த போலீசார் இருதரப்பையும் சமரசம் செய்து ராஜ்குமார் குடும்பத்தினரை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததாக கூறப்படுகிறது.

மருத்துவமனையில் பூங்கொடிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், பதற்றமாக காணப்பட்ட ராஜ்குமாருக்கு சிகிச்சையளிக்க முற்பட்டபோது, அவர் திடீரென மயங்கி விழுந்துள்ளார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் உயிரிழந்து விட்டதாக அதிர்ச்சி தெரிவித்துள்ளனர்..

இதுகுறித்து தங்களது குடும்பத்திற்கு தகவல் தெரிவிக்க, மருத்துவமனை வரும் வழியில் நடந்த தகராறில் ராஜ்குமாரை தாக்கியதே அவரது இறப்புக்கு காரணம் என கூறி பாராஞ்சி பகுதியில் அரக்கோணம் சோளிங்கர் நெடுஞ்சாலையில் ராஜ்குமார் குடும்பத்தினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்...இதனால் அவ்விடமே பரபரப்பான நிலையில், வாகனங்களை மாற்று வழியில் அனுப்பி வைத்தனர் போலீசார். உயிரிழப்புக்கு காரணமானவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் எனவும் இறந்த ராஜ்குமார் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர் . மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் இரண்டு பேரை பிடித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், பிரேத பரிசோதனை முடிவுகளே உயிரிழப்புக்கான காரணத்தை முடிவு செய்யும் என்கின்றது காவல்துறை வட்டாரம்... 

Tags:    

மேலும் செய்திகள்