புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி தாலுகாவுக்கு உட்பட்ட டி.களபம் ஊராட்சியில் அரசு தொடக்கப்பள்ளி உள்ளது. இங்கு கட்டுமானப் பணிகள் நடைபெற்றுவருவதால் அப்பகுதியில் உள்ள சேவை மையக் கட்டடத்தில் தற்போது பள்ளி செயல்பட்டு வருகிறது. அங்குள்ள நூலக கட்டடத்தில் மதிய உணவு சமைக்கும் பணி நடைபெற்றபோது, எதிர்பாராத விதமாக எரிவாயு சிலிண்டர் தீப்பிடித்து எரிந்துள்ளது. சிலிண்டரிலிருந்து தீ கொழுந்து விட்டு எரிந்த நிலையில் சமையலர்களும் அப்பகுதி மக்களும் ஈரச்சாக்கை போர்த்தி தீயை அணைத்துள்ளனர். தீ விபத்தில் கட்டடத்தின் மேற்கூரைப் பூச்சு பெயர்ந்து விழுந்து சேதமடைந்த நிலையில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. சம்பவம் தொடர்பாக தீயணைப்புத்துறையினரும் அதிகாரிகளும் ஆய்வு மேற்கொண்டனர்.