மதுரையை உலுக்கிய முகம் சிந்தைந்த ஆண் சடலம் - போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்டில் ஷாக் தகவல்
மதுரையில், கணவனைத் திட்டம் தீட்டி கள்ளக்காதலனுடன் சேர்ந்து கொலை செய்த மனைவி, ரயில் விபத்தில் கணவர் உயிரிழந்ததாக நாடகமாடிய அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி இருக்கிறது...
கடந்த சில நாட்களுக்கு முன்....மதுரை சோழவந்தான் அருகே, உள்ள ரயில்வே தண்டவாளத்தில், அடையாளம் தெரியாத நிலையில் முகம் சிதைந்த நிலையில் ஆண் சடலம் கிடந்துள்ளது
இது தொடர்பாகத் தகவலறிந்த போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்ததோடு, முதல் கட்டமாக ரயில் விபத்தில் சிக்கி உயிரிழந்ததாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
விபத்தில் சிக்கியது யார் ? அவரது குடும்பத்தினர் யார் ? என போலீசார் விசாரணை மேற்கொண்ட போது, பிரேதப் பரிசோதனை முடிவுகள் அதிர வைத்தது...
இறந்த நபர், ரயிலில் அடிபட்டு உயிரிழக்கவில்லை என்றும், கூர்மையான ஆயுதம் கொண்டு கொலை செய்யப்பட்டிருக்கலாம் எனத் தெரியவர, போலீசார் விசாரணையைத் தீவிரப்படுத்தினர்...
உயிரிழந்தவர் ஒட்டன் சத்திரம் இடும்பன் குரும்பபட்டியை சேர்ந்த எலெக்ட்ரிசியன் வேலை செய்யும் சக்திகணேஷ் என்பதும் மதுவுக்கு அடிமையான அவருக்கும், அவரது மனைவி பரமேஸ்வரிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது...
இந்நிலையில், சக்தி கணேஷ் வீட்டிலேயே தங்கியிருந்த தூரத்து உறவினரான கண்ணன் என்பவருக்கும், சக்தி கணேஷின் மனைவி பரமேஸ்வரிக்கும் தகாத உறவு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.இதுகுறித்து சக்தி கணேஷ் அடிக்கடி வீட்டில் பரமேஸ்வரியுடன் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார்.
இதனை தொடர்ந்து சக்திகணேஷை கொல்ல திட்டம் போட்டு இருக்கிறார் கண்ணன். அதன் அடிப்படையில் மது அருந்த சக்திகணேஷை சோழவந்தான் அருகே உள்ள ரயில் தண்டவாளம் பகுதிக்கு அழைத்துச் சென்று அங்கு இருவரும் மது அருந்தி இருக்கின்றனர். போதை தலைக்கேறிய நிலையில் கூர்மையான ஆயுதத்தால் சக்திகணேஷை கொலை செய்து தண்டவாளத்தில் வீசிச் சென்றதாக கண்ணன் போலீஸிடம் வாக்குமூலம் அளித்து இருக்கிறார்
இதனைத் தொடர்ந்து கண்ணன் மற்றும் கொலைக்கு உடந்தையாக இருந்த பரமேசுவரியையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.