சென்னையில் விபரீத கலாசாரம்.. ஊர் ஒதுக்குபுறம் `அந்த' கூத்து - கும்பலை காட்டி கொடுத்த கூகுள் மேப்
சென்னையில் போதைப்பொருள் சப்ளையில் ஈடுபட்டு வந்த கேம்ரூன் நாட்டு போதை கும்பலை, கூகுள் மேப்ஸ் டைம்லைன் வைத்து போலீசார் தட்டித்தூக்கிய சம்பவத்தின் அதிரடி பின்னணியை விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு...
சென்னையில் மெத்தபெட்டமைன் போதை பொருள் விற்பனை செய்பவர்களை தெற்கு மண்டல அதிதீவிர தடுப்பு பிரிவு போலீசார் தீவிரமாக கண்காணித்து வரும் சூழலில், சென்னையை சேர்ந்த ரகு என்பவர் 4 கிராம் மெத்தபெட்டமைன் போதை பொருள் விற்பனை செய்து கையும் களவுமாக பிடிபட்டார்..
இங்கு தொடங்கியது மெத்தபெட்டமைன் போதை பொருள் விற்பனை செய்வோரின் நெட்வொர்க் வேட்டை...
பிடிபட்ட ரகுவிடம் நடத்திய விசாரணையின் அடிப்படையில், கண்ணன் என்பவரையும் கைது செய்து விசாரணை நடத்தினர் போலீசார்.
இதில் டிண்டர் உள்ளிட்ட சில ஆப் மூலம் பழக்கமான நபர்களுக்கு மெத்தபெட்டமைன் போதைப் பொருட்களை கூடுதல் விலைக்கு விற்று வந்த இவர்கள், பெங்களூரில் ஆயிரத்து 500 ரூபாய்க்கு வாங்கி, சென்னையில் கூடுதல் விலைக்கு விற்பனை செய்து வந்தது.
அதிலும் பெங்களூரில் உள்ள ஒரு கேமரூன் நாட்டு கும்பலிடமிருந்தே மெத்தபெட்டமைன் வாங்கி வந்ததை அறிந்த போலீசார், அந்த கும்பலுக்கு வலை வீசினர்..
கைதான கண்ணனின் செல்போனை ஆராய்ந்து கூகுள் மேப்ஸ் டைம்லைனை பார்த்ததில், கேம்ரூன் கும்பல் இருக்கும் இடத்தை கணித்து பெங்களூருக்கு விரைந்தனர் போலீசார்.
பின்னர் அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போது, அதில் இருசக்கர வாகனத்தில் வந்த நபர் ஒருவர் மெத்தபெட்டமைன் பொருளை கொடுத்து சென்றது தெரியவந்துள்ளது..
இச்சம்பவம் நடந்த சுற்றுவட்டாரத்தில் சுமார் 15 கிலோமீட்டர் தொலைவில் உள்ள 200க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்து, கேம்ரூன் கும்பல் இருக்கும் இடத்தை அடைந்துள்ளனர்.
அங்கு அந்த கும்பல் உள்ள இடத்தை அறிய, அந்த தெருவில் சொந்த வீடு வைத்துள்ளவர்கள், வாடகைக்கு உள்ளவர்கள், வெளிநாட்டினர் என தனித்தனியாக லிஸ்ட் எடுத்து அதில் ஃபில்டர் செய்து, மாறு வேடத்தில் அதே தெருவில் ரவுண்ட் அப் செய்து காத்துக் கொண்டிருந்தனர்.
போலீசார் இருப்பதை அறிந்த போதைப் பொருள் கும்பலின் தலைவன் இருசக்கர வாகனத்தில் தப்பிக்க முயல, சினிமா பாணியில் சேஸ் செய்து அவரை மடக்கி பிடித்து கைது செய்தனர் போலீசார்...
பின்னர், அந்த போதைப் பொருள் கும்பல் தலைவன் தங்கியிருந்த அறையில் தீவிர சோதனை மேற்கொண்ட போலீசார், அறையின் கழிவறையில் வைக்கப்பட்டிருந்த வாசனை திரவியத்திற்குள் இருந்து 50 கிராம் மெத்தபெட்டமைன் போதைப் பொருளை பறிமுதல் செய்தனர்.
மேலும் கைது செய்யப்பட்ட ஜோனதானிடம் விசாரணை மேற்கொண்ட போது, ஊருக்கு ஒதுக்குப்புறமாக உள்ள ஓர் இடத்தில் லேப் ஒன்றை அமைத்து அங்கு போதை பொருளை தயாரிப்பதாகவும், அதுவும் கிலோ கணக்கில் தயாரித்தால் போலீசாரிடம் எளிதாக சிக்கிக் கொள்வோம் என்பதால் கிராம் கணக்கில் மட்டுமே தயாரித்து விற்பனை செய்து வருவதாக வாக்குமூலம் அளித்துள்ளார்.
எவ்வளவு கிராம் மெத்தபெட்டமைன் வேண்டுமோ அதைக் கேட்டால் தயாரித்து கொரியர் மூலமாக ஒரு இடத்தில் அவர்கள் கொடுப்பதாகவும், அதனை ஜோனதான் வாங்கி சென்னை, டெல்லி, மும்பை உள்ளிட்ட இடங்களில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு சப்ளை செய்வதாகவும் விசாரணையில் தெரிவித்துள்ளார்.
வாடிக்கையாளர்கள் தரக்கூடிய பணத்தை சம்பந்தப்பட்ட வங்கிக் கணக்கிற்கு ஏடிஎம் மூலமாக அனுப்பி வைப்பார் எனவும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
கைது செய்யப்பட்ட ரகு, கண்ணன் மற்றும் ஜோனதான் ஆகியோரை நீலாங்கரை காவல் நிலையத்தில் அதிதீவிர குற்றத் தடுப்பு பிரிவு போலீசார் ஒப்படைத்துள்ளனர்.