சைபர்கிரைம் உதவி எண் கட்டுப்பாட்டு அறைக்கு, கடந்த ஆண்டு 2 லட்சத்துக்கும் மேற்பட்ட அழைப்புகள் வந்திருப்பதாக, தமிழ்நாடு இணையவழி குற்ற தடுப்புபிரிவு ஆண்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.மொத்தம் வந்த 2 லட்சத்து 68 ஆயிரம் அழைப்புகளில், 34 ஆயிரம் அழைப்புகள் நிதிமோசடி தொடர்பானது என கூறப்பட்டுள்ளது. பதிவு செய்யப்பட்ட ஒரு லட்சத்து 27 ஆயிரம் தேசிய சைபர்கிரைம் அறிக்கையிடல் போர்டல் புகார்களில், 4 ஆயிரத்து 326 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. சைபர் மோசடிகளால் மக்கள் இழந்த மொத்தம் ஆயிரத்து 673 கோடி ரூபாய் பணத்தில், 771 கோடி ரூபாய் முடக்கப்பட்டுள்ளது. 83 கோடி ரூபாய் பாதிக்கப்பட்டவர்களுக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளது. 2024ஆம் ஆண்டில் மொத்தம் 838 சைபர் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். 34 நபர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சைபர் குற்றங்கள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும், இணைய பாதுகாப்பு நடைமுறைகளை மேம்படுத்தவும், சைபர்கிரைம் பிரிவு வரும் 28ஆம் தேதி சைபர் வாக்கத்தான் நடத்த திட்டமிட்டுள்ளது.