சென்னையில் நடைபெற்ற 48-வது புத்தக கண்காட்சி நிறைவு பெற்ற நிலையில், 20 கோடி ரூபாய்க்கு புத்தகங்கள் விற்பனை ஆனதாக பபாசி தெரிவித்துள்ளது. சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில், கடந்த டிசம்பர் 27-ஆம் தேதி 48-வது புத்தக கண்காட்சி தொடங்கியது. சுமார் 900 அரங்குகளில் ஆயிரக்கணக்கான தலைப்புகளில் லட்சக்கணக்கான புத்தகங்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன. ஒவ்வொரு நாளும் பள்ளி, கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள், பெண்கள், பெரியவர்கள் என பலரும் புத்தகத் திருவிழாவிற்கு சென்று புத்தகங்களை வாங்கி சென்றனர். 17 நாட்களாக நடைபெற்ற புத்தக கண்காட்சி நேற்றுடன் நிறைவடைந்தது. கடைசி தினம் மற்றும் ஞாயிற்றுக் கிழமை என்பதால், பொதுமக்களின் கூட்டம் அலைமோதியது. சுமார் 20 லட்சம் வாசகர்கள் நடப்பாண்டில் வருகை தந்ததாகவும், 20 கோடி ரூபாய்க்கு புத்தகங்கள் விற்பனையானதாகவும் பபாசி தலைவர் சேது சொக்கலிங்கம் தெரிவித்துள்ளார்.