மெரினாவிற்கு அடுத்த பெரிய பீச்சான நம் `சில்வர் பீச்’சுக்கா இந்த நிலை - அடிக்கும் அபாய மணி
சென்னை மெரினாவிற்கு அடுத்தபடியாக நீண்ட நெடிய மணற்பரப்பை கொண்ட கடலூர் சில்வர் பீச், மெல்ல மெல்ல தனது மணற்பரப்பை இழந்து வருவதாக சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். இது குறித்து விரிவாக பார்க்கலாம் இந்த செய்தி தொகுப்பில்...
கடலூர் மாவட்ட மக்களின் முக்கிய பொழுது போக்கு தளமாக விளங்குகிறது கடலூர் சில்வர் பீச்..
இங்கு வெளி மாவட்டங்கள் மட்டுமன்றி, வெளி மாநிலங்களில் இருந்தும் தினமும் ஏராளமான மக்கள் வருகை புரிவது வழக்கம்...
இந்நிலையில், சில்வர் பீச்சை சிறந்த சுற்றுலா தளமாக மேம்படுத்தும் விதமாக 5 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பல்வேறு புனரமைப்பு பணிகளும் நடந்து வருகிறது.
இந்த நிலையில் கடலூர் சில்வர் பீச் சமீப காலமாக தன்னுடைய மணற்பரப்பை கொஞ்சம் கொஞ்சமாக இழந்து வருகிறது. அதாவது கடந்த சில ஆண்டுகளில் மட்டும் 250 மீட்டர் மணற்பரப்பை முழுமையாக இழந்து, தற்போது மணற்பரப்பு சிறிய அளவில் மட்டுமே காணப்படுகிறது.
சமீபத்தில் வங்க கடலில் அடுத்தடுத்து ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு நிலைகள் காரணமாக தொடர்ந்து கடல் சீற்றம் இருந்த காரணத்தினால், சில்வர் பீச் சமீபத்தில் மட்டும் 50 மீட்டர் அளவிற்கு மணல் பரப்பை இழந்து கடல் நீர் உட்புகுந்துள்ளது.
மேலும் கடலூர் தேவனாம்பட்டினம் பகுதியில் 2004 ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமியின் காரணமாக கிராம பகுதி முழுவதும் கருங்கற்கள் கொட்டி தடுப்பு சுவர் அமைக்கப்பட்டது. இதன் விளைவு தான் தற்பொழுது கடலூர் சில்வர் பீச் பகுதி தன்னுடைய மணற்பரப்பை இழப்பதற்கு காரணம் என சமூக ஆர்வலர்களும், கடல் ஆராய்ச்சியாளர்களும் குற்றம் சாட்டுகின்றனர்.