`CBI தோத்துச்சு..' GPS வைத்தே வீடுகளில் மெகா கொள்ளை... வலம் வந்த போலி போலீஸ் கேங்... மிரட்டல் திருட்டு
ஆர்.எஸ்.புரம் பகுதியைச் சேர்ந்த குமார் - கீதா தம்பதி, பூ மார்க்கெட் பகுதியில் மளிகைக்கடை நடத்தி வருகின்றனர். கடந்த மாதம் 21-ம் தேதி இருவரும் வீட்டை பூட்டிக் கொண்டு, கடைக்குச் சென்றனர். அப்போது, அவர்களது வீட்டிற்குள் புகுந்த 2 பேர், 50 சவரன் நகைகள், 14 ஆயிரம் ரூபாய் பணத்தை கொள்ளையடித்தனர். புகாரின் பேரில், சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்ட போலீசார், கேரள மாநிலம் பாலக்காடு அருகே உள்ள பள்ளிவீரி பகுதியைச் சேர்ந்த ஜாகிர் உசேன், மோனிஷ் ஆகிய 2 பேரை கைது செய்தனர். குமாரின் மளிகைக் கடைக்கு பொருட்கள் வாங்க அடிக்கடி வரும் ஜாகிர் உசேன், அவரது வீட்டில் கொள்ளையடிக்க திட்டமிட்டுள்ளார். இதற்காக, மேக்னடிக் ஜிபிஎஸ் கருவியை குமாரின் பைக்கில் பொருத்தி, ஒரு வாரமாக அவரது நடமாட்டத்தை கண்காணித்துள்ளார். பின்னர், வீட்டில் ஆள் இல்லாததை தெரிந்து கொண்டு, கூட்டாளி மோனிசுடன் சென்று கொள்ளையடித்துள்ளார். மேலும், குட்கா பொருட்கள் விற்கப்படும் கடைகளில், ஸ்பெஷல் பிராஞ்ச் போலீஸ் என கூறி மிரட்டி ஜாகிர் உசேன் பணம் பறித்து வந்ததும் தெரியவந்துள்ளது. போலீசார் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.