15 வருடங்களாக அடிபடாத ஒரு பெயர்... இதுவரை அவிழா முடிச்சு - யார் இந்த அண்டர் வேர்ல்டு தாதா?

Update: 2024-07-19 04:32 GMT

15 வருடங்களாக அடிபடாத ஒரு பெயர்

ஆம்ஸ்ட்ராங் கொலையில் அவிழா முடிச்சு

யார் இந்த அண்டர் வேர்ல்டு தாதா சம்போ செந்தில்?

15 வருடங்களுக்கு முன் சென்னையை கலக்கிய பிரபல ரவுடி ஒருவரை, ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் போலீசார் தேடி வருகின்றனர். இதன் முழுப் பின்னணி குறித்தும் பார்க்கலாம் இந்த செய்தி தொகுப்பில்...

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில், பிரபல ரவுடியான சம்போ செந்திலை போலீசார் தேடி வருவது, வழக்கின் பின்னணி பரபரப்பை எகிறச் செய்திருக்கிறது...

கடந்த 15 ஆண்டுகளாக ரவுடிச களத்தில் பேசப்படாத சம்போ செந்தில்.. தற்போது ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் பேசப்பட்டிருப்பது யாரும் எதிர்பாரா ஒன்று..

ஏனென்றால், சம்போ செந்தில் குறித்தான தற்போதைய புகைப்படங்கள் போலீசாரிடமே கிடையாதாம்....

15 வருடங்களுக்கு முன்பு எடுக்கப்பட்ட அவரது புகைப்படங்களே தற்சமயம் உலவி வரும் நிலையில், தற்போது அவர் எப்படி இருப்பார் என்று போலீசாருக்கே தெரியாது எனக் கூறப்படுகிறது..

இந்நிலையில், ஆம்ஸ்ட்ராங்கின் கொலை வழக்கில் சம்போ செந்திலை தற்போது போலீசார் தேடி வருவது, அவர் கடந்த 15 வருடங்களாக ரியல் அண்டர் வேர்ல்டு தாதாவாக இருந்தது அம்பலமாகி இருக்கிறது...

தூத்துக்குடியை பூர்வீகமாக கொண்ட சம்போ செந்திலும் ஒரு வழக்கறிஞர்...

ரவுடிகள் தொடர்பான வழக்குகளை மட்டும் எடுத்து நடத்தி வந்த சம்போ செந்தில்.. ஒரு கட்டத்தில் ரவுடிகளுடன் நெருங்கிய பழக்கம் ஏற்பட்டு, பிரபல ரவுடியான கல்வெட்டு ரவியின் கூட்டாளியாகவே ஆகிப்போனார்..

ஒருநாள், கல்வெட்டு ரவியை தாக்க.. ரவுடிகள் காக்கா தோப்பு பாலாஜி, சிடி மணி போன்றார் அவரை சுற்றி வளைத்த நிலையில், அப்போது களத்தில் குதித்த சம்போ செந்தில்.. பின் தாதாவானதாக கூறப்படுகிறது...

வெறுமனே செந்தில்குமார் என அழைக்கப்பட்டு வந்த இவர், குற்றச்சம்பவங்களில் ஸ்கெட்ச் போடுவதிலும், சம்பவங்களை கச்சிதமாக நிறைவேற்றுவதிலும் கில்லாடியானதால், சம்போ செந்தில் என அடைமொழியுடன் அழைக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது...

4க்கும் மேற்பட்ட கொலை வழக்குகள் சம்போ செந்தில் மீது நிலுவையில் இருக்கும் நிலையில், இதுவரை எந்த வழக்கிலும் அவரை போலீசாரால் கைது செய்ய முடியவில்லை என்ற தகவலும் வெளியாகி இருக்கிறது.

இந்நிலையில், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில், முதலில் கைதான 11 பேரில், அருள் என்பவருக்கு இந்த சம்போ செந்தில் 4 லட்ச ரூபாய் பணம் கொடுத்து உதவியதாகவும், மேலும் கொலை சம்பவத்துக்கு ஸ்கெட்ச் போட்டு கொடுத்ததாகவும் சொல்லப்படுகிறது...

ஆம்ஸ்ட்ராங்கிற்கும், சம்போ செந்திலுக்கும் என்ன விரோதம் என ரவுடிகள் வட்டாரத்தை விசாரித்த போது, இருவரும் கடந்த சில வருடங்களாக தென் சென்னை பகுதிகளில் நேரடி மோதலில் ஈடுபட்டு வந்ததாக தகவல் வெளியாகி இருக்கிறது..

இந்நிலையில்தான் ஆம்ஸ்ட்ராங் கொலையில், ரவுடி சம்போ செந்திலை போலீசார் தேடி வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது

Tags:    

மேலும் செய்திகள்