கோவை மாவட்டம் இருகூர் பெட்ரோலிய எண்ணெய் நிறுவனத்தில் இருந்து, பெங்களூர் வரை எண்ணெய் குழாய்களை பதிக்க, விவசாயிகள் கடந்த ஓராண்டாக எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இந்நிலையில் திடீரென விவசாய நிலங்களில் குழாய் பதிப்பதற்கான ஆயத்தப் பணிகளை பெட்ரோலிய நிர்வாகத்தினர் மேற்கொண்டனர். 200 போலீசார் மற்றும் பொக்லைன் இயந்திரங்களுடன் குழாய் பதிப்பில் ஈடுபட்ட நிலையில், விவசாயிகள் அதனை தடுத்து நிறுத்த முற்பட்டனர். அப்போது விவசாயிகளுக்கும் அதிகாரிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. தொடர்ந்து குழாய் பதிக்கும் பணியானது நடைபெற்ற நிலையில், விவசாயிகள் சூலூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அதிகாரிகள் அழைத்துப் பேசாமல் பணியை தொடர்ந்தால், தர்ணாவில் தொடர்ந்து ஈடுபடப் போவதாக விவசாயிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதனால் அப்பகுதியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.