நெல்லை மாவட்டம், நாங்குநேரி அருகே, தாமிரபரணி கால்வாய் தடுப்பணையில் இருந்து தண்ணீர் திறக்க வந்த சபாநாயகரிடம், தடுப்பணை முழு கொள்ளளவை எட்டிய பிறகே திறக்க வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். நாங்குநேரி அருகே கருமேனியாற்றில் அமைந்துள்ள தடுப்பு அணையில் இருந்து தண்ணீரை திறக்க சட்டப் பேரவைத் தலைவர் அப்பாவு, நெல்லை எம்.பி. ராபர்ட் புரூஸ் ஆகியோர் வந்திருந்தனர். அப்போது அங்கு வந்த விஜயநாராயணம் மற்றும் இராமகிருஷ்ணாபுரம் விவசாயிகள், தடுப்பணை முழு கொள்ளளவை எட்டிய பிறகே திறக்க வேண்டும் என்று சபாநாயகரிடம் கோரிக்கை வைத்தனர். இதை கேட்டுக் கொண்ட சபாநாயகர், மக்களின் கோரிக்கைகளுக்கு மதிப்பளிப்பதாக கூறினார். இதையடுத்து, சம்பிரதாய முறைப்படி அணை திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஆத்தூர், ஏரல் உள்ளிட்ட பகுதிகளில் திமுக எம்.பி. கனிமொழி ஆய்வு செய்தார்.
ஆத்தூர் பாலத்தை நாடாளுமன்ற குழுத் தலைவர் கனிமொழி நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். பின்னர், தெற்கு ஆத்தூர் உள்ள வீரபாகு திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ள, மக்களை சந்தித்து ஆறுதல் கூறினார். அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் மற்றும் உணவு ஏற்பாடு குறித்தும் கனிமொழி கேட்டறிந்தார். பின்னர் உயர்மட்ட பாலத்தில் சேதமடைந்த பகுதிகளை பார்வையிட்ட அவர், அங்கு நடந்து வரும் பணிகள் குறித்தும், அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.