அண்ணா பல்கலை. மட்டும் அல்ல தமிழகத்தின் 6 யுனிவர்சிடிகளில்... "மூலக்காரணம்" -அடிக்கும் எச்சரிக்கை மணி
அண்ணா பல்கலைக்கழக விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், ஓராண்டுக்கு மேலாக துணைவேந்தர் இல்லாமல் தற்போது பெரும் சிக்கலில் சிக்கியுள்ளதாக கூறப்படுவதன் பின்னணியை அலசுகிறது இந்த செய்தி தொகுப்பு..
தலைமை இல்லாத எந்த ஒரு நிறுவனமும் சிறக்காது என்பதை உறுதிப்படுத்தும் வகையில் அமைந்திருக்கிறது அண்ணா பல்கலைக்கழகத்தில் அரங்கேறிய பாலியல் வன்கொடுமை சம்பவம்...
ஆம், ஓராண்டுக்கும் மேலாக துணைவேந்தர் இல்லாமல் போதிய அதிகாரம் இல்லாத நிலையில், ஒட்டுமொத்த நிர்வாகமும் முடங்கி போயுள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன...
அண்ணா பல்கலைக்கழகம் மட்டுமன்றி சென்னை பல்கலைக்கழகம், ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம், மதுரை காமராஜர் பல்கலைக்கழகம், சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகம், பாரதியார் பல்கலைக்கழகம், ஆகிய ஆறு பல்கலைக்கழகங்களில் தற்போதைய நிலவரப்படி துணைவேந்தர்கள் இல்லை...
பல்கலைக்கழகம் சிறப்பாக இயங்கவும், ஆசிரியர்களையும், மாணவர்களையும் ஒருங்கிணைத்து பல்கலைக்கழகத்தை நடத்தவும், தலைமை பொறுப்பில் துணைவேந்தர் செயல்படுவது முக்கியமானதாக கருதப்படுகிறது.
ஆனால் 6 பல்கலைக்கழகங்களிலும் துணைவேந்தர் இல்லாமல் பல மாதங்களாக தொடர்ந்து வருவது பல்வேறு நிர்வாக சிக்கல்களை ஏற்படுத்தி இருக்கிறது.
குறிப்பாக, சென்னை பல்கலைக்கழகம் , அண்ணா பல்கலைக்கழகம் போன்றவற்றில் ஓராண்டுக்கு மேலாக துணைவேந்தர் பதவி காலியாக உள்ளது. தலைமை இல்லாததன் விளைவை, அண்ணா பல்கலைக்கழகத்தின் தற்போதைய சம்பவம் உணர்த்தி இருக்கிறது.
அண்ணா பல்கலைக்கழகத்தில் கேமராக்கள் இயங்காததைக் கூட புகழ்பெற்ற தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தால் உறுதி செய்ய முடியவில்லை என்பது, நிர்வாக சிக்கல் தான் என அடிக்கோடிட்டு காட்டுகின்றனர் ஆசிரியர்கள்...
துணைவேந்தர் இருந்திருந்தால் இதுபோன்ற சிக்கல்களுக்கு தீர்வு கண்டிருக்க முடியும் என்றும், தேவையான நிதியை ஒதுக்கீடு செய்து உடனுக்குடன் இந்த பணிகளை செய்திருக்க முடியும் என்றும் தெரிவிக்கின்றனர்.
துணைவேந்தர் இல்லாததால் அனைத்து நிதி சார்ந்த முடிவுகளை பதிவாளரால் எடுக்க முடியாது என்றும், நிர்வாக குழு இருந்தாலும் கூட பல்கலைக்கழக பிரச்சனைகளில் அக்குழு கவனம் செலுத்துவது கிடையாது என்றும் சுட்டிக்காட்டுகின்றனர்.
இவற்றுக்கு தமிழக அரசியல் சூழலே மூலக்காரணம் என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள்...
துணை வேந்தர் நியமனத்தில் ஆளுநரும், உயர்கல்வித்துறையும் நீயா, நானா என போட்டிக் போட்டுக் கொண்டிருப்பதை சுட்டிக்காட்டி குற்றஞ்சாட்டி வருகின்றனர்..
இந்த பிரச்சினைக்கு முடிவு காணாத பட்சத்தில், வருங்காலத்தில் பல்வேறு சிக்கல்களை பல்கலைக்கழகங்கள் சந்திக்கலாம் என்றும், இதனால் மாணவர்களின் கல்வி வெகுவாக பாதிக்கப்படும் என்றும் பேராசிரியர்கள் இப்போதே எச்சரிக்கை மணி அடிக்கின்றனர்.
தந்தி டிவி செய்திகளுக்காக சென்னை செய்தியாளர் சங்கரன்...