டி20 உலகக்கோப்பையை இந்தியா வென்றது முதல் உலக செஸ் சாம்பியனாகி குகேஷ் சரித்திரம் படைத்தது வரை
டி20 உலகக்கோப்பையை இந்தியா வென்றது முதல் உலக செஸ் சாம்பியனாகி குகேஷ் சரித்திரம் படைத்தது வரை விளையாட்டின் முக்கிய நிகழ்வுகளை பார்க்கலாம் வாங்க...
டி20 உலகக்கோப்பையை வென்ற இந்தியா - நனவான பெருங்கனவு
2024ம் ஆண்டு டி20 உலகக்கோப்பை போட்டியில் தோல்வியே இல்லாமல் இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது இந்தியா...இந்தியா நிர்ணயித்த 177 ரன்கள் இலக்கை தென் ஆப்பிரிக்கா நெருங்க மீண்டும் ஒரு நாக்-அவுட் அதிர்ச்சியா என சோகத்தில் மூழ்கினர் இந்திய ரசிகர்கள்... ஆனால் கடைசி 5 ஓவர்களில் ஆட்டத்தின் போக்கை இந்திய பவுலர்கள் புரட்டிப்போட்டனர்... இறுதியில் 7 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது ரோகித் படை...
ப்பையை வென்ற ஸ்பெயின்...
ஜெர்மனியில் நடைபெற்ற யூரோ கோப்பை கால்பந்து தொடர்,, இந்த ஆண்டு கால்பந்து ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்தது. இறுதிப்போட்டியில் பலம் வாய்ந்த ஸ்பெயினும் இங்கிலாந்தும் மல்லுக்கட்டின. கடைசி நிமிடம் வரை ரசிகர்களை நகம் கடிக்க வைத்த ஃபைனலில் 2க்கு 1 என்ற கோல் கணக்கில் ஸ்பெயின் த்ரில் வெற்றி பெற்றது.
கோபா அமெரிக்கா - அர்ஜென்டினா சாம்பியன்
இந்த ஆண்டு அமெரிக்காவில் நடத்தப்பட்ட கோபா அமெரிக்கா கோப்பை கால்பந்து தொடரில் சாம்பியன் ஆனது அர்ஜென்டினா... கொலம்பியாவிற்கு எதிரான இறுதிப்போட்டியில் 1க்கு பூஜ்யம் என்ற கோல் கணக்கில் த்ரில் வெற்றியை ருசித்த மெஸ்ஸி படையை அர்ஜென்டினா தேசம் மீண்டும் கொண்டாடியது.
ஒலிம்பிக், பாராலிம்பிக்கில் பதக்கங்களை வென்ற இந்திய வீரர்கள்
பாரிஸில் நடைபெற்ற ஒலிம்பிக் திருவிழாவில் இந்தியா 6 பதக்கங்களை வென்றது. ஈட்டியெறிதல் நாயகன் நீரஜ் சோப்ரா வெள்ளி வென்றார். துப்பாக்கி சுடுதலில் மனு பாக்கர், ஸ்வப்னில் குசலே, சரப்ஜோத் சிங் வெண்கலம் வென்றனர். பாராலிம்பிக்கில் இந்திய வீரர்கள் 7 தங்கம் உள்பட 29 பதக்கங்களை வசப்படுத்தினர்.
இதயங்களை வென்ற வீர மகள் வினேஷ் போகத்...
பாரீஸ் ஒலிம்பிக்கில் 50 கிலோ எடைப்பிரிவு மல்யுத்த ஃபைனலில் இந்திய வீராங்கனை வினேஷ் போகத், தகுதி நீக்கம் செய்யப்பட்டது ஒட்டுமொத்த தேசத்தையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. 100 கிராம் கூடுதல் எடையால் பதக்கத்தைப் பறிகொடுத்தார் வினேஷ் போகத்... மேல்முறையீடு செய்தும் தீர்ப்பு சாதகமாக வரவில்லை... பதக்கத்தை வெல்லாவிட்டாலும் கோடிக்கணக்கான இந்தியர்களின் இதயங்களை வென்ற வினேஷ் போகத், அரசியலில் குதித்து எம்.எல்.ஏ ஆனது தனிக்கதை...
ஐபிஎல் - மகுடம் சூடிய கொல்கத்தா...
2024ம் ஆண்டு ஐபிஎல் தொடரில் மகுடம் சூடியது கொல்கத்தா.... சேப்பாக்கத்தில் நடைபெற்ற ஃபைனலில் ஹைதராபாத் 113 ரன்களுக்கு சுருண்டது. அதிரடி காட்டிய கொல்கத்தா 11வது ஓவரிலேயே இலக்கை எட்டி 3வது முறையாக ஐபிஎல் கோப்பையை வசப்படுத்தியது.
சேப்பாக்கத்தில் மீண்டும் 'தல' தரிசனம் உறுதி
கோடான கோடி ரசிகர்களின் நம்பிக்கை நட்சத்திரமான மகேந்திரசிங் தோனி, அடுத்த ஐபிஎல் தொடரில் விளையாடுவார் என்பது இந்த ஆண்டு உறுதியானது. அடுத்த ஐபிஎல்லில் தோனி விளையாடுவாரா மாட்டாரா என ரசிகர்கள் ஏக்கத்தில் இருந்தபோது, தோனியை தக்கவைத்து good news தந்தது சிஎஸ்கே...மீண்டும் சேப்பாக்கத்தில் தல தரிசனம் உறுதியாகிவிட்டதாக கொண்டாடினர் ரசிகர்கள்....
நீ பொட்டு வச்ச தங்கக்குடம் பாடலுடன்
ஐபிஎல் மெகா ஏலம் - கோடிகளை அள்ளிய நட்சத்திரங்கள்
சவுதி அரேபியாவில் நடைபெற்ற ஐபிஎல் மெகா ஏலத்தில் நட்சத்திர விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட்டை 27 கோடி ரூபாய்க்கு லக்னோ அணி ஏலம் எடுத்தது. ஐபிஎல் வரலாற்றில் அதிக தொகைக்கு ஏலம் போன வீரர் என வரலாறு படைத்தார் பண்ட்... சென்னை அணி அஷ்வினை 9 கோடியே 75 லட்சத்துக்கு ஏலம் எடுத்தது. மண்ணின் மைந்தன் அஷ்வின் சொந்த அணிக்கு திரும்பியதால் ரசிகர்கள் குஷியாகினர். 13 வயது வீரர் வைபவ் சூர்யவன்ஷியை 1 கோடியே 10 லட்சத்துக்கு ராஜஸ்தான் ஏலம் எடுத்தது கவனம் பெற்றது.
உலக சாம்பியன்ஸ் - சரித்திரம் படைத்த தமிழர்கள்
சிங்கப்பூரில் நடைபெற்ற உலக செஸ் சாம்பியன்ஷிப் தொடரில் சீன வீரர் டிங் லிரெனை வென்று உலக சாம்பியன் ஆனார் வெறும் 18 வயதே ஆன தமிழக வீரர் குகேஷ்.... மிக இளம் வயதில் உலக சாம்பியனாகி சரித்திரத்தின் பக்கங்களில் இடம்பெற்ற குகேஷ், ஒட்டுமொத்த தேசத்திற்கும் பெருமை தேடித் தந்தார். இதேபோல் உலகக்கோப்பை கேரம் சாம்பியன்ஷிப் தொடரில் மூன்று தங்கப் பதக்கங்களை வென்று வரலாறு படைத்தார் புது வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநரின் மகள் காசிமா...
58 வயதில் தீரத்துடன் களம் கண்ட டைசன் - நீ சிங்கம்தான்...
உலகமே எதிர்பார்த்திருந்த குத்துச்சண்டை போட்டியில் ஜாம்பவான் மைக் டைசன் தோல்வியைத் தழுவினார். 58 வயதில் தீரத்துடன் களம் கண்ட டைசன், 27 வயதான யூ-டியூப் பிரபலம் ஜேக் பாலிடம் கடைசி வரை போராடினார். 8 சுற்றுகளின் முடிவில் ஜேக் பால் வென்றாலும் நாக்-அவுட் ஆகாமல் கடைசி வரை களத்தில் நின்ற டைசனை A LION IS ALWAYS A LION என நெகிழ்ச்சியுடன் கொண்டாடினர் ரசிகர்கள்...
ஓய்வை அறிவித்த நட்சத்திரங்கள்...
2024ம் ஆண்டு பல நட்சத்திர வீரர்கள் ஓய்வை அறிவித்தனர். சர்வதேச டி20ல் இருந்து ரோகித், கோலி, ஜடேஜா ஓய்வை அறிவித்தனர். சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து வார்னர், டீன் எல்கர், நெய்ல் வேக்னர், தினேஷ் கார்த்திக், தவான், ஆன்டர்சன், மொயின் அலி, முகமது ஆமீர் ஓய்வு பெற்றனர். இதனிடையே சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து விலகுவதாக திடீரென வருட இறுதியில் அறிவித்தார் தமிழக வீரர் அஸ்வின்.. இந்திய கால்பந்து ஜாம்பவான் சுனில் சேத்ரி, ஹாக்கி அரண் ஸ்ரீஜேஷும் ஒய்வை அறிவித்தனர். டென்னிஸில் பிரெஞ்சு ஓபன் நாயகன் நடால் ஓய்வு பெற்றார். ஆன்டி முர்ரே, டொமினிக் தீம் உள்ளிட்டோரும் கேரியருக்குப் பிரியாவிடை கொடுத்தனர்.