`வி' சென்டிமென்ட்டில் விழுந்த பேரிடி... அப்செட்டான விஜய் "நாம் நினைத்தது ஏன் நடக்கல"

Update: 2024-09-13 05:31 GMT

முதல் மாநாட்டிற்காக தமிழக வெற்றிக் கழகம் தீயாய் செயல்பட்டு வந்த நிலையில், திடீரென மாநாடு தேதி மாற்ற ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது. இதற்கான காரணம் என்ன ? பார்க்கலாம் விரிவாக...

கொடி அறிவிப்பு, கொடிப்பாடல் அறிமுகம், தேர்தல் ஆணையத்தால் பதிவு செய்யப்பட்ட கட்சியாக அங்கீகாரம் என சில நாட்களுக்கு முன்பு வரை பரபரத்து கொண்டிருந்தது தமிழக வெற்றிக் கழகம்..

இதே வேகத்தில் முதல் மாநாட்டை நடத்தி விடவும் தீயாய் பணிகளை மேற்கொண்டு வந்த நிலையில், செப்டம்பருக்குள் மாநாடு நடத்தி விட வேண்டும் என முடிவோடு இருந்தது கட்சித்தலைமை..

ஆனால் தொடக்கம் முதலே செப்டம்பருக்குள் மாநாடு நடத்துவதில் சிக்கல் நீடித்து வந்ததாக தெரிகிறது.

முதலில் இடத்தேர்வுக்கே பல கட்ட ஆலோசனைகளை மேற்கொண்ட கட்சித்தலைமை, இறுதியாக வி சென்டிமென்ட் வைத்து விக்கிரவாண்டியை தேர்வு செய்ததாக தெரிகிறது..

விக்கிரவாண்டியில் எந்த இடத்தில் நடத்துவது என அலசி ஆராய்ந்து, ஓர் இடத்தை தேர்வு செய்து அதற்கான அனுமதிக்காக போலீசாரிடம் மனு அளிக்கப்பட்டது.

33 நிபந்தனைகளுடன் போலீசார் தரப்பில் அனுமதியளிக்கப்பட்ட நிலையில், மின்னல் வேகத்தில் பணிகள் நடந்து வந்ததாக கட்சி வட்டாரங்களில் பேசப்பட்டது.

இந்நிலையில் தான், மாநாடு தேதியை தள்ளி வைத்துள்ளது தவெக..

போலீசார் அனுமதியளித்த சூழலில், மாநாடு நடத்த குறுகிய நாட்கள் மட்டுமே உள்ளதால், பணிகள் மேற்கொள்வதில் சிரமம் இருப்பதாக கூறி ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது.

இந்நிலையில், 23ம் தேதி நடைபெறும் மாநாட்டிற்கு 45 ஏக்கர் பரப்பளவிற்கு வாகன நிறுத்துமிடம் என அனுமதியளிக்கப்பட்ட நிலையில், அந்த இடத்திற்கு தற்போது அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

மாநாடு நடத்தப்படும் இடத்தில் வாகனங்களை நிறுத்திக் கொள்ளுமாறு காவல்துறை தற்போது அழுத்தம் கொடுப்பதாக கூறப்படுகிறது..

காரணம், சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் 45 ஏக்கர் நிலப்பரப்பில் வாகனங்களை நிறுத்திவிட்டு, அங்கிருந்து இடதுபுறம் உள்ள மாநாடு திடலுக்கு தேசிய நெடுஞ்சாலையை கடந்து தான் செல்ல வேண்டி உள்ளதால், போக்குவரத்து பாதிப்பு ஏற்படும் என காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது.

இப்படி அடுக்கடுக்கான நெருக்கடிகளை சந்தித்து வந்த தவெக, அக்டோபர் மாதம் மாநாட்டு தேதியை ஒத்திவைக்க திட்டமிட்டுள்ளதாம்..

ஆனால், இந்த முடிவால் அப்செட்டில் உள்ளார் விஜய்...அக்டோபர் மாதம் பருவமழை தொடங்கி விடும் என்பதால் மாநாடு நடத்துவதில் நெருக்கடி நீடித்து வர, திட்டமிட்டப்படி மாநாடு நடத்த முடியவில்லை என அதிருப்தி தெரிவித்துள்ளார் தவெக தலைவர் விஜய்.

இதுமட்டுமன்றி, பண்டிகை காலம் என்பதால், அக்டோபர் மாதம் போலீசார் அனுமதி கிடைப்பதிலும் பெரிய சிக்கல் இருப்பதாக கூறப்படுகிறது.

அத்துடன் மாநாடுக்கான பணிகளும் தொடங்கப்படாத நிலையில், அடுத்த மாதம் 13ஆம் தேதி நடைபெற வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

உறுதி செய்யப்பட்ட மாநாடு தேதியை தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் நடிகர் விஜய் அறிவிப்பார் எனவும் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்