#BREAKING || கோவையில் ஆய்வை முடித்ததும்... முதல்வர் ஸ்டாலின் சொன்ன வார்த்தை

Update: 2024-11-07 09:31 GMT

இந்தியாவின் மற்ற மாநிலங்கள் பின்பற்றக்கூடிய வகையில் சாதனைத் திட்டங்களை நிறைவேற்றி வரும் நமது திராவிட மாடல் அரசின் ஒவ்வொரு திட்டமும் செயல்பாடுகளும் தமிழ்நாட்டு மக்களுக்கு முழுமையான பயன்களைத் தருவதை உறுதி செய்வதற்காக உங்களில் ஒருவனான நான் முதலமைச்சர் என்ற முறையில் மாவட்டந்தோறும் நேரில் கள ஆய்வு செய்யவிருக்கிறேன் என்பதை அக்டோபர் 22-ஆம் நாள் நாமக்கல் மாவட்டத்தில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் அறிவித்தேன். அதனைத் தொடர்ந்து கலைஞரின் உடன்பிறப்புகளாகிய உங்களிடமும் மடல் வாயிலாகத் தெரிவித்தேன்.

“நவம்பர் 5, 6 தேதிகளில் கோவைக்குச் சென்று கள ஆய்வினைத் தொடங்கவிருக்கிறேன். மற்ற மாவட்டங்களிலும் தொடரவிருக்கிறேன். கள ஆய்வுப் பணிகளை அந்தந்த மாவட்டங்களில் நிறைவு செய்தபிறகு, கழகப் பணிகளையும் ஆய்வு செய்வேன். கண்மணிகளாம் உடன்பிறப்புகளையும் நேரில் கண்டு நெஞ்சம் மகிழ்வேன்" என்று உங்களில் ஒருவன் மடலில் குறிப்பிட்டிருந்தேன். சொன்னதைச் செய்வோம் என்பதுதானே நம் உயிர்நிகர் தலைவர் கலைஞர் நமக்குக் கற்றுத்தந்துள்ள ஆட்சி நிர்வாகத்தின் அடிப்படைப் பாடம். அதன்படியே நவம்பர் 5, 6 இரண்டு நாட்களிலும் கோவை மாவட்டத்தில் கள ஆய்வுப் பணிகளை மேற்கொள்ளப் பயணமானேன்.

மேற்கு மண்டலத் தி.மு.க.வில் ஓட்டை விழுந்துவிட்டதுபோல அரசியல் களத்தில் சித்தரிக்கப்படுவதற்கு மாறாக, கொள்கை உரமிக்க மூத்த நிர்வாகிகளையும், இலட்சிய நோக்கத்துடன் செயல்படும் இளைய பட்டாளத்தையும் கொண்ட கழகத்தின் கோட்டையாக மேற்கு மண்டலம் இருக்கிறது என்பதை, கோவையில் தரையிறங்கியதுமே உணர முடிந்தது. விமான நிலையத்திலிருந்து வெளியே வந்து, களஆய்வின் முதல் நிகழ்வான எல்காட் தகவல் தொழில்நுட்பப் பூங்காவைத் திறந்து வைப்பதற்குச் செல்வதற்காகப் புறப்பட்டபோது, 6 கிலோமீட்டர் நெடுகிலும் சாலையின் இருபுறமும் மக்கள் வெள்ளம்.

கோவையில் உள்ள மூன்று கழக மாவட்டங்களைச் சேர்ந்த நிர்வாகிகள், தொண்டர்கள் ஆகியோருடன் பொதுமக்கள், அதிலும் குறிப்பாக பெண்கள் - இளைஞர்கள் திரண்டு நின்று வரவேற்பளித்தனர். வழிநெடுக மக்களின் முகம் பார்த்து எனக்கு ஏற்பட்ட மகிழ்ச்சியைப் போலவே, தமிழ்நாட்டின் முதலமைச்சர் பொறுப்பில் உள்ள உங்களில் ஒருவனான என்னைப் பார்த்து மக்கள் வெளிப்படுத்திய மகிழ்ச்சி என்பது அவர்களின் உள்ளத்திலிருந்து வெளிப்பட்டு முகத்தில் பிரதிபலித்தது. புன்னகைத்து, கையசைத்து, “அடுத்ததும் உங்க ஆட்சிதான்” என்று மனதார வாழ்த்தி மகிழ்ந்தனர். தாய்மார்கள் பலரும் தங்கள் பிள்ளைகளையும் பேரப்பிள்ளைகளையும் அழைத்து வந்து குடும்பமாக வாழ்த்துகளைத் தெரிவித்துக் கையசைத்தனர். அந்தக் குழந்தைகளின் முகம் கண்டு நானும் மனதளவில் குழந்தையானேன்.

Tags:    

மேலும் செய்திகள்