பெரியாரின் சொந்த மண்ணில் களமிறங்கும் சீமான்.. மாறிய களம்.. பொங்கல் நாளன்று காத்திருக்கும் சம்பவம்
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டதும் அரசியல் களத்தில் அனைவரது பார்வையும் எதிர்க்கட்சிகளை நோக்கி திரும்பியது.
கொங்கு மண்டல தொகுதியில் அதிமுக கோதாவில் குதிக்குமா? என்ற கேள்விக்கு நாங்க புறக்கணிக்கிறோம் என அறிவித்துவிட்டார் அக்கட்சி பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி.
அதிமுக முடிவை பார்த்து பாஜக காய் நகர்த்தலாம் என பேசப்பட்டது. ஆனால் பாஜக மையக்குழு கூட்டத்தில் பெரும்பான்மை நிர்வாகிகள் விருப்பம், போட்டியிட வேண்டாம் என சொன்னதாக தகவல் வெளியானது.
இதற்கிடையே வழக்கம்போல் நாங்க இல்லாமையா? என கோதாவில் குதித்தது நாம் தமிழர் கட்சி. திமுகவும் வேட்பாளரை அறிவிக்க, திமுக வெர்சஸ் நாம் தமிழர் என ஆட்டம் நகர்ந்தது.
இந்த சூழலில் அதுபோன்ற சூழலுக்கு விடக்கூடாது; அது 2 ஆவது இடத்தை விட்டுக்கொடுப்பதாகிவிடும்; கொங்கு மண்டல தொகுதியில் நாம நம்ம பலத்தை காட்ட வேண்டும் என்ற பேச்சும் பாஜகவில் எழுந்ததாக தகவல்கள் வெளியானது.
மீண்டும் பாஜகவில் மத்திய அமைச்சர் எல். முருகன், மேலிட பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி, அண்ணாமலை என ஹை லெவல் மீட்டிங் நடைபெற்றது.
இதனால் பாஜக போட்டியிடுமா? என்ற எதிர்பார்ப்பு அதிகரிக்க, நாங்களும் புறக்கணிக்கிறோம், மக்களை திமுக அடைத்து வைப்பதை விரும்பவில்லை என கூறி விலகியிருக்கிறது பாஜக.
இப்படி எதிர்க்கட்சிகள் எல்லாம் விலக பொங்கல் அன்று வேட்பாளரை அறிவிப்பேன் என கூறியிருக்கிறார் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான்...
2024 நாடாளுமன்றத் தேர்தலில் 8.20 சதவீத வாக்கு, 6 தொகுதிகளில் மூன்றாவது இடம் என மாநில கட்சி அங்கீகாரம் பெற்ற நாம் தமிழர் கட்சி உற்சாகமாக களம் காணும் தேர்தல்...
நாடாளுமன்றத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி 3 ஆவது இடம்பிடித்த 6 தொகுதிகளில் ஈரோடு தொகுதியும் ஒன்று.
அப்போது ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை தொகுதியில் 17,539 வாக்குகளோடு நாம் தமிழர் கட்சி 4 ஆவது இடம் பிடித்திருந்தது.
மாநில திமுக அரசை கடுமையாக விமர்சிக்கும் சீமானின் பெரியார் குறித்த பேச்சு அரசியல் களத்தை புரட்டிப்போட்டுள்ளது. திமுகவுக்கும்... சீமானுக்கும் இடையே பெரியார் விவகாரத்தில் கடுமையான வார்த்தைப் போர் நீள்கிறது. இந்த சூழலில் பெரியாரின் பிறந்த வீடாக இருக்கும் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுகவுக்கும், நாதகவுக்கும் இடையே போட்டி என்பது தனிக்கவனம் பெற்றுள்ளது.