தேசிய கீதத்துக்கு எதிரானவர் முதலமைச்சர் என்ற போலி பிம்பத்தை ஏற்படுத்தம் ஆளுநர் ரவி - காங்கிரஸ்
தேசிய கீதத்துக்கு எதிரானவர் முதலமைச்சர் ஸ்டாலின் என்ற போலி பிம்பத்தை ஏற்படுத்த ஆளுநர் ரவி முயற்சி செய்வதாக காங்கிரஸ் விமர்சித்துள்ளது.
இதுதொடர்பாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் எஸ்.சி., பிரிவு தலைவர் ரஞ்சன் குமார் வெளியிட்ட அறிக்கையில், தேசிய கீதத்துக்கு எதிரானவர் முதலமைச்சர் ஸ்டாலின் என்ற போலி பிம்பத்தை ஏற்படுத்த ஆளுநர் ரவி முயற்சி செய்கிறார் என்பதையே அவர் வெளியிட்ட கருத்து புலப்படுத்துவதாகவும் அரசியலமைப்பு 176 வது பிரிவின்படி, மாநில அரசின் உரையை ஆளுநர் படிக்க வேண்டும் எனவும் எந்த மாநிலத்திலும், அரசு தயாரிக்கும் உரையை படிக்க மறுத்து, சொந்தக் கொள்கையை திணிக்க ஆளுநர்கள் முயல்வதில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.
தனது உரையில் பெரியார், அண்ணா, கலைஞர் பெயர்களை உச்சரிப்பதை தவிர்ப்பதற்காகவே, ஏதாவது ஒரு காரணத்தைச் சொல்லி 3 முறை அவையிலிருந்து ஆளுநர் வெளியேறியதாகவும் மூன்றாவது முறை வெளிநடப்பு செய்தும் கூட, அம்பலப்பட்டு நிற்பதால், தேசிய கீதத்தை முதலமைச்சர் மதிக்கவில்லை என்பது போன்ற நாடகத்தை அரங்கேற்ற ஆளுநர் துடிப்பதாகவும் தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, நிகழ்ச்சி முடிவில் தான் தேசிய கீதம் இசைக்கப்படும். எனவே, தேசிய கீதத்தை அவமதித்து அவையிலிருந்து வௌியேறிய ஆளுநர், பகிரங்க மன்னிப்புக் கேட்க வேண்டும். இல்லையேல், அவரை பதவியிலிருந்து மத்திய அரசு வெளியேற்ற வேண்டும் என ரஞ்சன் குமார் தெரிவித்துள்ளார்.