சீமான் எடுத்த நிலைப்பாடு.. கொத்து கொத்தாக வெளியேறும் மா.செ.க்கள் - தட்டித்தூக்கும் தவெக

Update: 2024-11-10 09:16 GMT

சீமான் எடுத்த நிலைப்பாடு.. கொத்து கொத்தாக வெளியேறும் மா.செ.க்கள் - தட்டித்தூக்கும் தவெக.. அண்ணனுக்கு தலைவலியான தம்பி?

அடுத்தடுத்து நாம் தமிழர் கட்சியில் இருந்து வெளியேறும் மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள், அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது கடும் விமர்சனங்களை முன்வைப்பதற்கான காரணங்கள் என்ன? நாதக-வில் நடப்பது என்ன? பார்க்கலாம்..விரிவாக..

கடந்த 2010 ஆம் ஆண்டு மே 18 ஆம் தேதி, தமிழ்த் தேசியக் கொள்கையை மையமாகக் கொண்டு சீமானால் உருவாக்கப்பட்டதே இந்த நாம் தமிழர் கட்சி. தொடங்கிய நாள் முதலே திமுகவிற்கும், காங்கிரஸிற்கும் எதிரான அரசியலை முன்னெடுத்து வருகிறார், சீமான்..

2016ஆம் ஆண்டு முதல் தேர்தலில் களமிறங்கிய நாதக, 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிட்டு 1.1 சதவிகித வாக்குகளும், 2019-ல் நடந்த மக்களவை தேர்தலில் 40 தொகுதிகளில் போட்டியிட்டு, 3.9 சதவிகித வாக்குகளையும் பெற்றது.

2020-ல் நாதகவில் சீமானைத் தாண்டி மக்களுக்கு பரீட்சயமான முகங்களாக இருந்த ராஜீவ்காந்தி, கல்யாணசுந்தரம் உள்ளிட்டோர் அக்கட்சியில் இருந்து அடுத்தடுத்து திடீரென விலகினர். இருப்பினும், 2021 தேர்தலில் நாதக 6.58 சதவிகித வாக்குகளைப் பெற்றது..

இப்படியாக நாதக, மாநில அந்தஸ்தை பெற்ற நிலையில், முக்கிய நிர்வாகிகள் கட்சியில் இருந்து விலகுவது தொடர்கதையானது..

கடந்த 4 மாதத்தில் விழுப்புரம் வடக்கு மாவட்ட செயலாளர் சுகுமார், விழுப்புரம் மேற்கு மாவட்ட செயலாளர் பூபாலன், கிருஷ்ணகிரி மண்டல பொறுப்பாளர் பிரபாகரன், திருச்சி மண்டல பொறுப்பாளர் பிரபு, திருப்பத்தூர் வடக்கு மாவட்ட செயலாளர் தேவேந்திரன் என இப்படியாக இதன் பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது..

தெருமுனை கூட்டங்கள், தேர்தல் பரப்புரைகள், பொதுக்கூட்டங்கள் என அனைத்தையும் தங்கள் கைகாசு போட்டு நடத்தியும், சீமான் எங்களை மதிப்பதில்லை எனக் குமுறுகின்றனர், நாதக நிர்வாகிகள் பலரும்...

சர்வாதிகார அணுகுமுறையையும், உட்கட்சியில் ஜனநாயகமற்ற தன்மையும் தான், இப்படி முக்கிய நிர்வாகிகளின் தொடர் விலகலுக்குக் காரணம் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

சமீபத்தில் நாதகவில் இருந்து விலகுவது தொடர்பாக செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த தேவேந்திரனை, நாதக குருதி பாசறையை சேர்ந்த ஒருவர் மிரட்டி கைகலப்பில் ஈடுபட்ட சம்பவமும் அரங்கேறியது பரபரப்பை ஏற்படுத்தியது.

தங்களது சுயநலத்திற்காகவே நாம் தமிழர் கட்சியை நடத்துவதாக முன்னாள் நாதக நிர்வாகி தேவேந்திரன் குற்றம்சாட்டி இருந்தார்.

கட்சியில் நான் எடுப்பதே இறுதி முடிவு.. இருந்தால் இரு, இல்லையெனில் கட்சியை விட்டு கிளம்பு என்பது தான் சீமான் நிலைப்பாடு எனப் பலரும் வேதனை தெரிவிக்கின்றனர்.

இப்படி அதிருப்தியில் இருந்த நாதக நிர்வாகிகளுக்கு, இளைஞர்களின் ஓட்டு நமக்குத்தான் என்ற நம்பிக்கையை ஆட்டிப்பார்க்கும் விதமாக அமைந்திருக்கிறது, விஜய் தொடங்கிய தமிழக வெற்றிக் கழகம்.

விஜய்யின் அரசியல் வருகையால், இனி நாதகவின் வாக்குகள், த.வெ.க.-விற்கு திரும்பலாம்? என்ற பேச்சும் பரவலாக எழத் தொடங்கியுள்ளது.

இதையெல்லாம் உணர்ந்த சீமான், இதற்காகவே த.வெ.க. தலைவர் விஜய்யை கடுமையாக விமர்சிப்பதாகவும் கூறப்படுகிறது..

இதை உணர்ந்த சீமானின் தம்பிகள் தங்கள் நிலைப்பாட்டை மாற்றி வருகிறார்களோ என எண்ண தோன்றுகின்றது.

இனியாவது, சீமான் கட்சி முடிவுகளை நாதக நிர்வாகிகளிடம், கலந்து ஆலோசித்து எடுப்பாரா? தம்பிகளுக்கு ஏற்பட்டு வரும் மனமாற்றத்தை சீமான் எப்படி எதிர்கொள்வார்? என்பன உள்ளிட்ட பல கேள்விகள் எழுந்துள்ளன.

Tags:    

மேலும் செய்திகள்