"ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு விவகாரத்தில் ஈபிஎஸ் ராஜினாமா செய்தாரா?" - அமைச்சர் கடும் குற்றச்சாட்டு

Update: 2024-06-28 02:10 GMT

கள்ளக்குறிச்சி விவகாரத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் ராஜினாமா செய்ய வேண்டுமெனவும், சிபிஐ விசாரணை நடத்தவும் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ள நிலையில், அதனைக் கண்டித்து அமைச்சர் கே.என். நேரு அறிக்கை வெளியிட்டுள்ளார்...

ஜெயலலிதா மரணத்திற்கு சிபிஐ விசாரணை வேண்டுமென முன்னாள் முதலமைச்சர் ஓபிஎஸ் உண்ணாவிரதம் இருந்ததை சுட்டிக் காட்டியுள்ள கே.என். நேரு, அதற்கு ஈபிஎஸ் முட்டுக்கட்டை போட்டதாக குற்றஞ்சாட்டியுள்ளார். அப்போது சிபிஐ விசாரணைக்கு ஒப்புக்கொள்ளாத ஈபிஎஸ் தற்போது மட்டும் எதற்காக சிபிஐ விசாரணை வேண்டுமென கூறுகின்றார் எனக் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், அதிமுக ஆட்சியின் போது 4 ஆயிரத்து 800 கோடி ரூபாய் நெடுஞ்சாலை டெண்டர் முறைகேடு நடந்ததாகவும், அந்த வழக்கில் சிபிஐ விசாரணைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதையும் கூறியுள்ள கே.என். நேரு, அந்த விசாரணைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்படுமென அதிமுக அமைச்சர்கள் கூறியதையும் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். அன்றைக்கு சிபிஐக்கு பதற்றம் அடைந்த ஈபிஎஸ் தான் தற்போது அதற்கு தம்பட்டம் அடிக்கிறார் எனக் கூறியுள்ளார். குறிப்பாக ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு, பொள்ளாச்சியில் அரங்கேறிய பாலியல் வன்கொடுமை விவகாரம், கொடநாடு கொலை கொள்ளை விவகாரங்கள் மற்றும் சாத்தான்குளம் தந்தை, மகன் மரணம் ஆகியவற்றின் போதெல்லாம் பதவி விலகாத ஈபிஎஸ், தற்போது ஸ்டாலினை பதவி விலகச் சொல்வதில் என்ன அருகதை இருக்கிறது எனக் குற்றஞ்சாட்டியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்