உலக அளவில் தபேலா இசையில் தனக்கென தனிப் பாதையை உருவாக்கிய இசைமேதை ஜாகிர் ஹூசைன்

Update: 2024-12-16 13:06 GMT

மூன்று வயதில் தபேலா கற்கத் தொடங்கிய சிறுவன்.. ஐந்து வயதில் தனியாக வாசிக்கத் தொடங்கி.. தனது 12வது வயதில்

தனது கச்சேரியை நடத்திக் காட்டி அமெரிக்காவை ஆச்சரியப்பட வைத்தவர் பிரபல இசைமேதை ஜாகிர் ஹூசைன்.

மும்பையில் கடந்த 1951 ம் ஆண்டு பிறந்த ஜாகிர் ஹூசைனின்

தந்தை அல்லா ராக்கா பிரபல இசைக் கலைஞராக விளங்கியதால் மூன்று வயதிலேயே ஜாஹிர் ஹுசைனைக்கு தபேலா கற்றுக் கொடுக்க ஆரம்பித்தார். அதன் பின்னர் ஜாகிர் ஹூசைன் இசையில் எடுத்த வேகம், நுணுக்கம் பார்வையாளர்களை மிரளச் செய்தது.

கல்லூரி படிப்பை முடித்த ஜாகிர் ஹூசைனிடம் அவரது தந்தை உனக்கு கற்றுக் கொடுத்தது நான் தான் என்றாலும், உனக்கென தனி அடையாளத்தை ஏற்படுத்திக் கொள் என்ற உத்வேக வார்த்தைதான் தான் அவரை இசையில் உச்சம் கொள்ள வைத்திருக்கிறது.

70களில் ஜாகிர் வெளியிட்ட “லிவிங் இன் தி மெட்டீரியல் வேர்ல்டு“ என்ற அவரது முதல் ஆல்பம் அவரை சர்வதேச அரங்குகளில் அவரை பிரபலமடையச் செய்தது. அந்த காலகட்டத்தில் முதல் ஆல்பம் வெளியிட்ட தபேலா இசை கலைஞர் என்ற பெருமையும் ஜாகிருக்கு சேர்ந்தது. தொடர்ந்து ஆண்டு ஒன்றுக்கு 150க்கு மேற்பட்ட இசைக்கச்சேரிகள் என உலக நாடுகளுக்குப் பறந்து கொண்டிருந்தார்.

90களில் மோகன்லால் நடித்த வானப்பிரஸ்தம் என்ற திரைப்படத்திற்கு இசை அமைத்த ஜாகிர் ஹூசைன் அதில் நடிக்கவும் செய்திருந்தார். இந்த திரைப்படம் சர்வதேச திரைப்பட விழாவில் விருதுகளைக் குவித்தது.

இதனைத் தொடர்ந்து தி மிஸ்டிக் மஸார், இன் கஸ்டடி உள்ளிட்ட ஆங்கில படங்களுக்கும் இசை அமைத்து இருக்கிறார். தொடர்ந்து ஜாகிர் அண்ட் ஹிஸ் ஃப்ரெண்ட்ஸ், தி ஸ்பீக்கிங் ஹேண்ட் , ஜாகிர் உசேன் அண்ட் தி ஆர்ட் ஆஃப் தி இந்தியன் டிரம், உள்ளிட்ட படங்களில் ஜாகிர் ஹூசைன் நடித்தும் இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.’

தனது 37 வயதில் பத்மஸ்ரீ விருதைப் பெற்ற ஜாகிர் ஹூசைன் அதன் பின்பாக நான்கு கிராமி விருதுகள், பத்ம பூஷண் உள்ளிட்ட பல விருதுகளை வென்றெடுத்தார். அமெரிக்காவில் உள்ள ஸ்டான்ஃபோர்டு பல்கலைகழகத்தின் பேராசிரியராகவும் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

73 வயதாகும் ஜாகிர் ஹூசைன் கடந்த சில வருடங்களாக அமெரிக்காவில் உள்ள சான் ஃப்ரான்சிஸ்கோவில் குடும்பத்துடன் வசித்து வந்தார். இந்த நிலையில் கடந்த சில நாட்களாக நுரையீரல் பிரச்சனை தொடர்பாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஜாகிர் ஹூசைன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

தபேலா இசையில் பல சாதனைகளை நிகழ்த்திய ஜாகிர் ஹூசைனின் மரணம் உலகத்திலுள்ள அவரது ரசிகர்களைச் சோகத்தில் ஆழ்த்தி இருக்கிறது...

Tags:    

மேலும் செய்திகள்