கர்நாடகாவில் ஒரு இளம் பெண், மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைக்காததால், ஓடும் ரயிலில் இருந்து குதித்து த*கொலை செய்து கொண்டார்.
கலபுருகி மாவட்டத்தின் சேடம் பகுதியை சேர்ந்த 20 வயதான தனுஜா, மருத்துவக் கல்லூரியில் இடம் பெறும் நோக்குடன் சித்ரதுர்கா சென்றார். அவரது மதிப்பெண்ணிற்கு அங்கு இடம் கிடைக்காததால், மனம் உடைந்த நிலையில், ராயதுர்கம் வழியாக சொந்த ஊருக்கு திரும்ப ரயிலில் ஏறினார். தனுஜா ஏற்கனவே ஒருமுறை நுழைவு தேர்வை எழுதி அதில் சரியான மதிப்பெண் கிடைக்காத நிலையில், தற்போது எழுதிய நுழைவுத் தேர்வின் மதிப்பெண்ணும் மருத்துவ படிப்பிற்கு சேர போதுமானதாக இல்லாததால் மனவேதனை அடைந்துள்ளார். ரயில் பயணத்தின் நடுவே, பெற்றோரை அலைபேசியில் அழைத்து, இரண்டு முறை நுழைவுத் தேர்வு எழுதியும் தன்னால் மருத்துவ படிப்பில் சேர முடியவில்லை என்றும் அதனால் தான் த*கொலை செய்ய முடிவெடுத்ததாக கூறி செல்போன் இணைப்பை துண்டித்துள்ளார். தனுஜாவின் பெற்றோர் அவரை தொடர்பு கொள்ள முயன்ற போது அவரது செல்போன் அணைத்து வைக்கப்பட்டிருந்தது. அவர்கள் ரயில்வே போலீசாருக்கு தகவல் அளித்த பின், செல்போன் இணைப்பு துண்டிக்கப்பட்ட நேரத்தையும் அந்த நேரத்தில் ரயில் இருந்த இடத்தையும் அடிப்படையாக வைத்து ரயில்வே போலீசார் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டு, அனந்தபூர் அருகே தனுஜாவின் உடலை கண்டறிந்தனர்.