ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் பெட்ரோல் பங்க் அருகில் நின்றிருந்த ரசாயனம் ஏற்றி வந்த டேங்கர் வாகனத்தின் மீது லாரி ஒன்று மோதியதில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் 8 பேர் பலியாகியுள்ள நிலையில் 30 பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்தில் பெட்ரோல் பங்க்கில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பல்வேறு வாகனங்களும் தீப்பற்றி எரிந்து சேதமடைந்தன.
இந்த நிலையில் விபத்தில் உயிரிழந்தோர்க்கு இரங்கல் தெரிவித்துள்ள பிரதமர் மோடி காயமடைந்தோர் விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாகவும் தெரிவித்துள்ளார். உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு பிரதமர் நிவாரண நிதியிலிருந்து 2 லட்சம் ரூபாயும் காயம் அடைந்தோருக்கு 50 ஆயிரம் ரூபாயும் நிவாரணமாக வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.