கடையில் QR Code-ஐ Scan செய்து அனுப்பியதும் வேறு யாருக்கோ சென்ற பணம்..பார்த்ததுமே ஆடிப்போன கடைக்காரர்
மத்திய பிரதேசம் மாநிலம், Khajuraho பகுதியில் கடைகளில் ஆன்லைன் பணப் பரிவர்த்தனைக்கான ஒரிஜினல் QR Code-களின் மீது, போலியான QR Code-களை ஒட்டி நூதன மோசடி செய்ததாக ஒருவர் கைது செய்யப்பட்டு உள்ளார்.
அப்பகுதியைச் சேர்ந்த ஒரு கடையில், ஓம்வதி குப்தா என்ற வாடிக்கையாளர், QR Code-ஐ ஸ்கேன் செய்து ஆன்லைனில் பணம் செலுத்த முயற்சித்த போது, கடைக்காரரின் பெயருக்கு பதிலாக, 'சோட்டு திவாரி' என வேறு யாரோ ஒருவரின் பெயரைக் காட்டவே, சூதாரித்துக் கொண்ட வாடிக்கையாளர் இதை கடைக்காரரிடம் கூறியுள்ளார்.
பிறகு, இதைக் கண்ட அதிர்ச்சியில் ஆடிப்போன கடைக்காரர், இது குறித்து காவல் நிலையத்திலும் புகார் அளித்தார். இதன் பேரில், அப்பகுதி சிசிடிவிக்களை ஆய்வு செய்தபோது, மர்ம நபர்கள் 2 பேர் இரவோடு இரவாக, கடைகள், பெட்ரோல் பங்குகள் உள்ளிட்டவையில் போலியான QR Code-களை ஒட்டியது, அம்பலமானது.
இந்த நூதன மோசடி தொடர்பாக, ஜான்சி பகுதியைச் சேர்ந்த சோட்டு திவாரி என்பவரை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்த ஏராளமான போலி QR கோடுகளையும் பறிமுதல் செய்து, தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.
இந்த மோசடி வழியில், கடந்த 72 மணி நேரத்தில், ஆயிரத்து 700 ரூபாய் வரை பெற்றுள்ளதாக போலீஸ் தரப்பு தெரிவித்து உள்ளது.
இதில் தொடர்புடைய பிறரையும் வலைவீசித் தேடிவரும் அம்மாநில போலீசார், இது போன்ற நூதன மோசடிகளில் இருந்து வியாபாரிகள் உள்பட அனைவரும் அலர்ட்டாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தி உள்ளனர்.